‘வேண்டிய கல்வி யாண்டுமூன்று இறவாது’ (கற்-47) என்னும் சூத்திரத்திற்கு, “துறவறத்தினைக் கூறும் வேதாந்தம் முதலிய கல்வி வேண்டிய யாண்டைக் கடவாது. அக்கல்வி எல்லாம் மூன்று பதத்தைக் கடவாது என்றவாறு.” “மூன்று பதமாவன: அது என்றும், நீ என்றும், ஆனாய் என்றும் கூறும் பதங்கள் தாம். அவை பரமும் சீவனும் அவ்விரண்டும் ஒன்றாதலின், இம் மூன்று பதத்தின்கண்ணே தத்துவங் கடந்த பொருளை உணர்த்தும் ஆகமங்கள் எல்லாம் விரியுமாறு உணர்ந்து கொள்க” என்று உரையும் விளக்கமும் எழுதுகின்றார். இவர் இங்கே, தத்துவமஸி மகாவாக்கியம் சாந்தோக்ய உபநிஷத்தில் கூறிய கருத்துகளை எடுத்துக் கூறுகின்றார் என்றும், இது அத்வைதிகளுக்குச் சிறப்பாக உரியது என்றும் கூறுவர்.1 இவர், சமயப் பொது நோக்கு உடையவர். திருமாலை நிலங்கடந்த நெடுமுடி அண்ணல் என்றும், வேங்கட மலையை நிலங்கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து வீடுபெற்ற மலை என்றும் (தொல்காப்பியம்-சிறப்புப்பாயிர உரையில்) குறிப்பிடுகின்றார். புறத்திணையியலில் ‘அருளொடு புணர்ந்த அகற்சி’ என்பதனை விளக்க, புத்த பெருமானின் துறவைக் குறிப்பிடும் பாடலை மேற்கோள் காட்டுகின்றார். சமண சமயக் காப்பயிமாகிய சிந்தாமணிக்கு உரை எழுத அச்சமயக் கருத்துகளை எல்லாம் நன்கு கற்றுத் தெளிந்துள்ளார். எழுத்ததிகார முதற் சூத்திர உரையில், ‘வீடு பேற்றிற்கு உரிய ஆண் மகனை உணர்த்தும் சிறப்பான் னகரம் பின்வைத்தார்’ என்று சைனசமயத்தவர் போலக் கூறுகின்றார். காலம் நச்சினார்க்கினியர் சில உரையாசிரியர்களின் பெயரையும் உரையையும் குறிப்பிட்டுள்ளதால் அவர்களுக்குப் பின்னர் வாழ்ந்தவர் என்பது விளங்கும். இவர், இளம்பூரணர் சேனாவரையர் பேராசிரியர் ஆகிய மூவரையும் குறிப்பிடுகின்றார். வேறு சில உரையாசிரியர்களைப் பெயர் கூறாமல் அவர்களின் கருத்துக்களைக் குறிப்பிடுகின்றார். இவர் நன்னூலாரின் கருத்துக்களைச் சொல்லதிகார உரையில் (எச்ச-61, 19, 20) குறிப்பிடுகின்றார். தொடர்நிலைச் செய்யுள் என்பதனைக் காப்பியம் என்று வழங்கலாம் என்ற அடியார்க்குநல்லார் கருத்தை (சிலப். -பாயிரவுரை) சீவகசிந்தாமணி யுரையின் தொடக்கத்தில் மறுப்பதால், அவருக்கு இவர் பிற்பட்டவர் என்பது விளங்கும். 1 நச்சினார்க்கினியர் மு. அண்ணாமலை (1956) பக்கம். 6, 7. |