திருமுருகாற்றுப்படையில் (176)), ஒளவையார் பாடல் ஒன்றை மேற்கோள் காட்டுகின்றார். சீவக சிந்தாமணியில், முக்தி இலம்பகத்தில் ‘நாடக நயந்து காண்பார்’ என்னும் செய்யுள் (391) உரையில் கோடகம் என்பதற்கு, “தாமம் மகுடம் பதுமம் கோடகம் கிம்புரி என்னும் ஐவகையிற் சிகரமாய்ச் செய்த முடி” என்று நச்சினார்க்கினியர் உரைப்பது, சூடாமணி நிகண்டு கூறும் கருத்து. (சூடாமணி-ஏழாம் பகுதி: செயற்கை வடிவப் பெயர்த் தொகுதி-22). சூடாமணி நிகண்டு (விசயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயர் காலமாகிய) பதினான்காம் நூற்றாண்டில் தோன்றியதாகும். எனவே, நச்சினார்க்கினியர் காலம் பதினான்காம் நூற்றாண்டின் இறுதியாகும். வான்புகழ் சிறந்த பல நூல்களுக்கு அரிய உரை இயற்றிய இப்பெரியாரைப் புலவர் பெருமக்கள் பெரிதும் போற்றிப் புகழ்கின்றனர். ‘உச்சிமேற் புலவர் கொள் நச்சினார்க்கினியர்’ என்று இலக்கணக் கொத்தின் ஆசிரியரும், ‘அமிழ்தினும் இனிய தமிழ்மடவரல் செய் அருந்தவத்தின் பெரும்பயனாக அவதரித்து’ அருளியவர் என்று டாக்டர் உ.வே. சாமிநாத ஐயரும், ‘செந்தமிழ் மாமுகில் வள்ளல்’ என்று மறைமலையடிகளும் இவரைப் புகழ்கின்றனர். இலக்கியச் சுவை சொட்டச் சொட்ட உரைநடை எழுதும் ஆற்றலை வியந்து, ‘அமுதவாய் உடையன்’ என்று பாராட்டுவர். பல சிறந்த நூல்களை ஆழ்ந்து பயின்று உரை எழுதியதோடு, 82 அரும் பெரும் நூல்களைக் கற்றுத் தெளிந்து அவற்றிலிருந்து மேற்கோள் பல காட்டி இருப்பதால், நச்சினார்க்க கினியன் எச்சில் நறுந்தமிழ் நுகர்வர் நல்லோர் என்று பாடி, இவரைப் புகழ்வர். இவர் நுழையாத துறை இல்லை. தொட்டுச் சுவைக்காத நூல் இல்லை! நச்சர்-நச்சினார்க்கினியரா ? திருக்குறளுக்கு முற்காலத்தில் உரை எழுதிய பதின்மரில் ‘நச்சர்’ என்பவரும் ஒருவர். நச்சர் என்பவர், நச்சினார்க்கினியரே என்றும், அவர் செய்த திருக்குறள் உரை இன்று மறைந்துபோனது என்றும் சிலர் கூறி வருகின்றனர். நச்சர் என்ற பெயரே இவ்வாறு கருதத் தூண்டியது. இக் கருத்து உண்மையன்று என்பதற்குப் பின்வரும் காரணங்களைக் கூறலாம்: |