பக்கம் எண் :

உரையாசிரியர்கள்240

     1. பரிமேலழகர், திருக்குறள் உரையாசிரியர்களில் இறுதியில்
தோன்றியவர். பத்தாவது உரையாசிரியர் அவரே. அவருக்கு முன் நச்சர்,
மணக்குடவர் முதலிய ஒன்பது உரையாசிரியர்களும் இருந்தனர்.
நச்சினார்க்கினியர் பரிமேலழகர்க்குப் பிற்பட்டவர். நச்சினார்க்கினியர்
பரிமேலழகரை மறுக்கும் இடங்கள் உண்டு. ஆதலின், பரிமேலழகருக்கு முன்
தோன்றி, உரைஎழுதிய நச்சர் வேறு; பரிமேலழகரை மறுக்கும்
நச்சினார்க்கினியர் வேறு.

     2. நச்சினார்க்கினியர் இயற்றிய உரைநூல்களைக் குறிப்பிடும்
பழம்பாடலும் உரைச் சிறப்புப் பாயிரமும் நச்சினார்க்கினியர்; திருக்குறளுக்கு
உரை இயற்றியதாகக் குறிப்பிடவில்லை.

     3. நச்சினார்க்கினியர், தாம் இயற்றிய உரைகளில், தமது உரைகளைப்
பற்றிக் குறிப்பிடுவதுண்டு. எவ்விடத்தும் அவர், திருக்குறளுக்குத் தாம் உரை
இயற்றி இருப்பதாய்க் குறிப்பிடவில்லை.

     4. திருக்குறளை எடுத்தாளும் இடங்களிலும், குறட்பாவுக்கு வேறு
உரையும், புதுவிளக்கமும் தரும் இடத்திலும் நச்சினார்க்கினியர் திருக்குறளுக்கு
உரை எழுதிய குறிப்பு எதுவும் இல்லை.

     “சங்கு உடைந்தனைய” (547) என்னும் சீவக சிந்தாமணிப் பாடலுக்கு
உரை எழுதும் போது, சங்கு சுட்டாலும் நிறம் கெடாதது போலக் 
கெட்டாலும் தன் தன்மை கெடாத குடியுமாம்; நத்தம் போற்கேடும் (குறள்
235) என்ப” என்று திருக்குறளை எடுத்துக்காட்டுகின்றார். இக் குறளுக்கு
இவர் ஏனைய உரையாசிரியர்கள் கொண்ட உரையினும் வேறு உரை
கண்டுள்ளார்.

     முதற் குறளுக்கு இவர் எழுதும் விளக்கம் சுவையானது.

     “இறைவன் இயங்குதிணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும்
பிறவற்றின்கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப
முடிந்தாற்போல, அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து
அவற்றின் தன்மையாயே நிற்குமென்பது சான்றோர்க் கெல்லாம் ஒப்ப
முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான், அகரமாகிய முதலையுடைய
எழுத்துக்களெல்லாம்; அதுபோல இறைவனாகிய முதலையுடைத்து உலகம்
என வள்ளுவனார் உவமை கூறியவற்றானும் பிற நூல்களானும் உணர்க.”
(மொழிமரபு-13)

     இவற்றையெல்லாம் நோக்கும்போது, நச்சினார்க்கினியர் வேறு; நச்சர்
வேறு என்பது விளக்கும்.