தலைமகளும் தோழியும் பறித்துக் கொண்டுவந்து பாறையிலே குவித்து, மாலை தொடுத்துத் தம் தலையில் சூட்டிக் கொண்டதாய் அப்புலவர் பாடுகின்றார். அப்பூக்கள் யாவும் குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் உரியவை அல்ல; ஐவகை நிலங்களுக்கும் உரியவை. அவை யாவும் ஓரிடத்தில்-மலை நிலத்தில் - இருந்தன என்பது பொருந்தாது. மேலும் அப்பூக்கள் ஒரு காலத்தில் பூப்பனவும் அல்ல. வேனிற் காலத்தில் சிலவும், கார்காலத்தில் சிலவும் பனிக்காலத்தில் சிலவும் பூப்பன. அவையாவும் ஒரே காலத்தில் பூத்திருந்தன என்பதும் பொருந்தாது. எல்லாப் பூக்களும் ஒரே நேரத்தில் பூப்பதும் இல்லை. காலையில் சிலவும், நண்பகலில் சிலவும், மாலையில் சிலவும், நள்ளிரவில் சிலவும் பூக்கும் இயல்புடையவை. இவ்வாறு நிலம், பெரும்பொழுது, சிறுபொழுது ஆகிய மூன்றினாலும் ஒற்றுமைப்படாத பூக்கள், ஓரிடத்தில்-ஒரு காலத்தில்-ஒரு நேரத்தில் பூத்திருந்தன என்று கூறுவது பொருந்தாது. நச்சினார்க்கினியர் இவற்றை நன்கு ஆராய்ந்துள்ளார். இத்தகைய எண்ணங்கள் அவர் உள்ளத்தில் எழுந்துள்ளன. தொல்காப்பியம் அகத்திணை இயலில், எந்நில மருங்கிற் பூவும் புள்ளும் அந்நிலம் பொழுதொடு வாரா ஆயினும் வந்த நிலத்தின் பயத்த ஆகும் (அகத்-19) என்ற சூத்திரத்திற்கு உரை எழுதியபின், “கபிலர் பாடிய பெருங் குறிஞ்சியில் (குறிஞ்சிப் பாட்டு) வரைவு இன்றிப் பூ மயங்கியவாறு காண்க” என்று மிகச் சுருக்கமாக எழுதியுள்ளார். இங்கே அவரது ஆராய்ச்சித் திறன் வெளிப்படுகின்றது. அப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 வகையான பூக்களைப் பற்றியும் அவர் நன்கு அறிந்தே பொருள் எழுதுகின்றார். அப் பூக்களைப்பற்றி அவர் அறிந்துள்ள செய்திகளும் விளக்கமும் நமக்கு வியப்பு அளிக்கின்றன. காந்தள், தோன்றி இரண்டையும் சிலர் ஒன்றாகவே கருதுகின்றனர். ஆனால் கபிலர், வள்ளிதழ் ஒள்செங் காந்தள் (61) என்றும், சுடர்ப்பூந் தோன்றி (90) |