என்றும் தனித்தனியே கூறுகின்றார். நச்சினார்க்கினியரும் இவற்றை வேறுபடுத்தி, “பெரிய இதழையுடைய ஒள்ளிய சிவந்த கோடற்பூ” என்றும், “விளக்குப் போலும் பூவினையுடைய தோன்றிப்பூ” என்றும் உரைக்கின்றார். தாழை (80) என்பதற்குத் ‘தெங்கின் பாளை’ என்றும், கைதை (83) என்பதற்குத் ‘தாழம்பூ’ என்றும் உரை எழுதி நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றார். சங்க இலக்கியப் புலவர் கூறிய பூப்பெயரைத் தம் காலத்தில் வழங்கும் பெயருடன் இணைத்துக் காட்டி, நமக்கும் அப்பெயர் அறிமுகம் ஆகும் அளவிற்கு அவர் உரை அமைந்துள்ளது: சுள்ளி(66)-மராமரப் பூ குடசம்(67)-வேட்பாலைப் பூ வகுளம்(70)-மகிழம் பூ போங்கம்(74)-மஞ்சாடி மரத்தின் பூ சேடல்(82)-பவழக்கால் மல்லிகைப் பூ நள்ளிருள் நாறி(94)-இருவாட்சிப் பூ என்ற விளக்கம் இன்று நமக்குப் பெரிதும் பயன்படுகின்றன. எழுத்துகளின் வடிவம்பற்றி இவர் ஆராய்ந்து கூறும் இடங்களும் உண்டு. “ஆய்தம் என்ற ஓசைதான் அடுப்புக் கூட்டுப் போல மூன்று புள்ளி வடிவிற்று என்பது உணர்த்தற்கு ஆய்தம் என்ற முப்பாற் புள்ளியும் என்றார். அதனை இக்காலத்தார் நடுவு வாங்கியிட்டு எழுதுப” (எழுத்:2) என்று ஆய்த எழுத்தின் வடிவத்தை ஆராய்கின்றார். உயிர்மெய் எழுத்துக்களின் வடிவம் பற்றிப் பின் வருமாறு கூறுகின்றார்: “உருவு திரிந்து உயிர்த்தலாவது மேலும் கீழும் விலங்கு பெற்றும், கோடு பெற்றும், புள்ளி பெற்றும், புள்ளியும் கோடும் உடன் பெற்றும் உயிர்த்தலாம். கி கீ-முதலியன மேல் விலங்கு பெற்றன. கு கூ-முதலியன கீழ் விலங்கு பெற்றன. கெ. கே-முதலியன கோடு பெற்றன. கா ஙா - முதலியன புள்ளி பெற்றன: அருகே பெற்ற புள்ளியை இக் காலத்தார் காலாக எழுதினார். மகரம் உட்பெறு புள்ளியை வளைத்து எழுதினார். கொ கோ ஙொ ஙோ முதலியன புள்ளியும் கோடும் உடன் பெற்றன.” உடம்படு மெய் ய், வ் இரண்டு மட்டுமின்றி ஏனைய மெய்களும் உடம்படுமெய்யாக வரும் என்றும்,உயிரீற்றின் பின்வருவதோடு |