மெய்யீற்றின் பின்னும் உடம்படுமெய் வரும் என்றும் மொழியியலார் கூறுவர். இக் கருத்தை நச்சினார்க்கினியர் கூறியுள்ளார்: “ஒன்றின முடித்தல் என்பதனால், ‘விண்வத்துக் கொட்கும்’ எனச் சிறுபான்மை புள்ளி யீற்றினும் வரும். செல்வுழி, உண்புழி என்பன, வினைத்தொகை என மறுக்க.” (எழுத் - 140) புனைந்து கூறிய கதைகள் மூல நூல்களில் இல்லாத கதைகளை இவர் புனைந்து கூறுதலும் உண்டு. தொல்காப்பியம், சிறப்புப் பாயிரத்துள் தொல்காப்பியரையும் அகத்தியரையும் இணைத்து இவர் புதிய கதை யொன்றைப் புனைந்து உரைக்கின்றார். “தேவர் எல்லாம் கூடி, ‘யாம் சேர இருத்தலின், மேருத் தாழ்ந்து தென்திசை உயர்ந்தது; இதற்கு அகத்தியனாரே ஆண்டு இருத்தற்கு உரியர்’ என்று அவரை வேண்டிக்கொள்ள, அவரும் தென்திசைக்கண் போதுகின்றவர் கங்கையாருழைச் சென்று காவிரியாரை வாங்கிக் கொண்டு” என்று இவர் கட்டிவிட்ட கதை நீண்டு செல்கின்றது. சிவஞான முனிவர், இந்தக் கதை எந்தப் புராணத்திலும் இல்லாமை கண்டு, நச்சினார்க்கினியர் சொந்தக் கதை என்று உணர்ந்து இதனை மறுக்கின்றார்; “அகத்தியரோடு முரணிச் சபித்தாராயின் அவ்வாறு ஓர் ஆசிரியரும் கூறாமையானும், அது வேத வழக்கோடும் ஆன்றோர் வழக்கோடும் மாறு கொள்வார் கூற்றேயாம் என மறுக்க” என்பது அவரது மறுப்புரை. பத்துப் பாட்டில் இவர். கதை புனைந்து கூறும் இடங்கள் சில உள்ளன. சிறுபாணாற்றுப் படையில், (172-173) திறல்வேல் நுதியின் பூத்த கேணி விறல்வேல் வென்றி வேலூர் என்ற அடிகளுக்கு நச்சினார்க்கினியர், “முருகன் கையில் வலியினை யுடைத்தாகிய வேலின் நுதிபோல கேணி பூக்கப்பட்ட வெற்றியையுடைய வேலாலே வெற்றியையுடைய வேலூர்” என்று பொருள் எழுதி, பின்வரும் கதையைக் கூறுகின்றார்: “‘நல்லியக் கோடன், தன் பகை மிகுதிக்கு அஞ்சி, முருகனை வழிபட்டவழி அவன், ‘இக் கேணியிற் பூவை வாங்கிப் பகைவரை எறி’ என்று கனவிற் கூறி, அதிற் பூவைத் தன் வேலாக நிருமித்த தொரு கதை கூறிற்று” என்று எழுதுகின்றார். மூல நூலில் இல்லாத கதையை இவரே புனைந்து உரைக்கின்றார். |