பெரும்பாணாற்றுப் படையில் (வரி. 31) தொண்டைமான் இளந்திரையனைக் கடியலூர் உருத்திரங் கண்ணனார், திரைதரு மரபின் உரவோன் என்று குறிப்பிடுகின்றார். இந்த வரிக்கு நச்சினார்க்கினியர் “கடலின் திரை கொண்டு வந்து ஏறவிட்ட மரபால்...திரையன் என்னும் பெயரை யுடையவன்” என்று பொருள் கூறி, கதை ஒன்றைக் கூறுகின்றார். “நாகபட்டினத்துச் சோழன், பிலத்துவாரத்தால் நாகலோகத்தே சென்று நாக கன்னியைப் புணர்ந்த காலத்து அவள் ‘யான் பெற்ற புதல்வனை என்ன செய்யக் கடவேன்?’ என்ற பொழுது, “தொண்டையை அடையாளமாகக் கட்டிக் கடலிலே விட, அவன் வந்து கரை ஏறின், அவற்கு யான் அரசவுரிமையை எய்துவித்து நாடாட்சி கொடுப்பல்!” என்று அவன் கூற, அவளும் புதல்வனை அங்ஙனம் வரவிடத் திரை தருதலின், திரையன் என்று பெயர் பெற்ற கதை கூறினார்”. இக் கதையினை மறுத்து, ‘திரை தரு மரபின் உரவோன்’ என்பதற்கு ந.மு. வேங்கடசாமி நாட்டார் வேறு பொருள் கூறுகின்றார். “முந்நீர் வண்ணன் புறங்கடை அந்நீர்த் திரைதரு மரபின் உரவோன் உம்பல்’ என்பதற்கு, கடல் வண்ணனாகிய திருமாலின் பின் வந்தோனும், கடல் நீர்த் திரையால் தரப்பட்ட மரபினையுடைய உரவோனும் ஆகிய சோழனது வழித் தோன்றல்-என்பதே நேரிய பொருளாகும். நச்சினார்க்கினியர், இளந்திரையன் திரையால் தரப்பட்டவன் ஆதல்வேண்டும் என்னும் கொள்கை உடையராய், அதற்கு ஏற்பச் சொற்களை மாற்றி வலிந்து பொருள் கூறினர். திரையன் என்பது சோழனுக்கு உரியதோர் பெயர் எனக் கொள்ளவேண்டும்”.* நச்சினார்க்கு இனியரா ? நச்சினார்க்கினியர் என்ற இனிய பெயரை உடைய இவர், இன்னாத கருத்துகள் சிலவற்றை எழுதி, தமிழறிஞர்களின் வெறுப்பைத் தேடிக் கொண்டுள்ளார். நால்வருணக் கொள்கை. பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பிக்கும் குலமுறைக் கோட்பாடு, வேத நெறிக்கு மக்களை இணங்க வைக்கும் நோக்கம், வடமொழிக் கொள்கைகளின் மீது கொண்டுள்ள கடும் பற்றுள்ளம் ஆகியவற்றை இவரிடம் காணலாம். பழம் பெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல் காப்பியத்திற்கு உரை எழுதும்போது, பிற்காலக் * கள்ளர் சரித்திரம் (1928) பக்கம். 32. |