கொள்கையையும் தம் கருத்தையும் இடையிடையே புகுத்தி விடுகின்றார். தமிழர் பண்பாட்டிற்கு மாறுபட்ட கொள்கைகளைக் கூறும்போது, தமிழறிஞர்களின் நெஞ்சம் புண்படுகின்றது. நச்சினார்க்கு இனியவராக இருக்கவேண்டிய இவர், இன்னாதவராக மாறி, தமிழ்நெஞ்சங்களில் வெறுப்பை வளர்த்து விட்டார். தொல்காப்பியம் அகத்திணை இயலில், ஏவல் மரபின் ஏனோரும் உரியர் ஆகிய நிலைமை அவரும் அன்னார் (அகத்-24) என்ற சூத்திரத்திற்குப் பின்வருமாறு பொருள் எழுதுகின்றார். “வேத நூலுள் கூறிய இலக்கணத்தானே, பிறரை ஏவிக் கொள்ளும் தொழில் தமக்கு உளதாகிய தன்மையை உடைய அந்தணர் அரசர் வணிகரும் அம் மூவரைப்போல பிறரை ஏவிக் கொள்ளும் தன்மையாராகிய குறுநில மன்னரும் அரசராற் சிறப்புப் பெற்றோரும் நால்வகை வருணம் என்று எண்ணிய வகையினால் ஒழிந்துநின்ற வேளாளரும் உரிப்பொருள் தலைவர் ஆவதற்கு உரியர் என்றவாறு.” இவ்வாறு பொருள் எழுதியபின், சங்க இலக்கிய அகத்திணைப் பாடல்களுக்கு உரிய தலைமக்கள் மீது நால்வகை வணருப் பாகுபாட்டைத் திணிக்கின்றார். ‘முளிதயிர் பிசைந்த’ (குறுந்-166) என்ற குறுந்தொகைப் பாடலைக் காட்டி “இது பார்ப்பானையும் பார்ப்பனியையும் தலைவராகக் கூறியது” என்று குறிப்பிடுகின்றார். இவ்வாறே ஏனைய வருணத்தாரையும் சங்கப் பாடல்களில் சுட்டிக் காட்டுகின்றார். கலித்தொகைப் பாடல்களில் வரும் தலைவன் தலைவிக்கும் இவர் நால்வருண வண்ணத்தைப் பூசி வேறுபடுத்திக் காட்டுகின்றார். தலை மக்களை நால்வருண வேறுபாட்டால் பிரித்து அறியும்முறை முற்காலத்தில் இல்லை. ஆதலின் இவ்வாறு உரை காண்பது பொருந்தாது. நால்வருவண வேறுபாட்டையும், பிறப்பால் கற்பிக்கப் படும் உயர்வு தாழ்வுகளையும் விளக்கமாக இவர் கூறும் இடங்களும் உள்ளன. களவியலுள், ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப; மிக்கோன் ஆயினும் கடிவரை இன்றே |