பக்கம் எண் :

257ஆய்வு

வகையால் கற்பிக்கப்படுதலின், அத் தொழிலைக் கற்பு என்றார்’ (கற்-1. உரை)
என்று உரை எழுதி, வேத நெறியைப் புகுத்துகின்றார்.

     தமிழ் மக்கள் கனவிலும் நினையாத ஒரு வழக்கத்தை - மரபை -
நச்சினார்க்கினியர் தமிழ்மக்கள் மீது சுமத்துகின்றார்.

     கற்பியலில் (5),

          கரணத்தின் அமைந்த முடிந்த காலை

என்ற அடிக்கு, “ஆதிக் கரணமும் ஐயர் யாத்த கரணமும் என்னும்
இருவகைக் சடங்கானும் ஓர் குறைபாடு இன்றாய், மூன்று இரவின் முயக்கம்
இன்றி, ஆன்றோர்க்கு (மதி கந்தருவர் அங்கி) அமைந்த வகையால் பள்ளி
செய்து ஒழுகி நான்காம் பகல் எல்லை முடிந்த காலத்து” என்று
பொருந்தாவுரை எழுதித் தமிழறிஞர்களின் வெறுப்புக்கு ஆளாகின்றார்.

          அல்லல் தீர ஆர்வமொடு அளைஇச்
         சொல்லுறு பொருளின் கண்ணும்

(கற்-5)

என்ற அடிகளுக்கு, “வரைந்த காலத்து, ‘மூன்று நாள் கூட்டம் இன்மைக்குக்
காரணம் என்?’ என்று தலைவி மனத்து நிகழா நின்ற வருத்தம் தீரும்படி
மிக்க வேட்கையோடு கூடியிருந்து வேதம் சொல்லுதல் உற்ற பொருளின்
கண்ணும்” என்று உரை எழுதிய பின் மேலும் தம் கருத்தைத்
தெளிவுபடுத்துகின்றார்.

     “அது, முதல்நாள் தண்கதிர்ச் செல்வற்கும், இடைநாள் கந்தருவர்க்கும்,
பின்னாள் அங்கியங் கடவுளுக்கும் அளித்து நான்காம் நாள், அங்கியங்
கடவுள் எனக்கு நின்னை அளிப்ப, யான் நுகர வேண்டிற்று, அங்ஙனம்
வேதம் கூறுதலால் எனத் தலைவிக்கு விளக்கம் கூறுதல்” என்று வேத
நெறியை விளக்குகின்றார்.

     தமிழ் இலக்கண நூலுக்கு உரைஎழுதப் புகுந்த நச்சினார்க்கினியர்,
வடமொழியில் உள்ள வேத நெறியையும், குல முறைக் கோட்பாட்டையும் தம்
உரையில் புகுத்தித் தமிழ்மக்களின் பண்பாட்டிற்கு மாசு ஏற்படுத்தியதை
நினைந்து துன்புறும் தமிழ் நெஞ்சங்கள் பலவாகும்.

     சிறுபாணாற்றுப்படையில் ‘கருதியது முடித்தலும்’ (212) என்ற
தொடருக்கு நச்சினார்க்கினியர், ‘தன் நெஞ்சு கருதிய புணர்ச்சியைக் குறை
கிடவாமல் முடிக்கவல்ல தன்மையும்’ என்றும், ‘நுகர்தற்கு உரிய மகளிரை
நுகர்ந்து பற்று அறாக்கால் பிறப்பு அறாமையின், கருதியது முடிக்கவேண்டும்
என்றார்” என்றும் எழுதும் கருத்துகளைத் தமிழறிஞர்கள் ஏற்பதில்லை.