ஏற்றவாறு சொற்களை அமைத்து, பொருந்தா உரை எழுதுகின்றார். இவ்வாறு நச்சினார்க்கினியர் தம் கருத்தையே சாதிக்கும் இடங்கள் இன்னும் பலவற்றை எடுத்துக் காட்டலாம். 2 . சீவகசிந்தாமணி உரை நச்சினார்க்கினியர் தம் புலமைகொண்டு உழுது பயன் கண்ட விளைநிலங்களில் சீவக சிந்தாமணியும் ஒன்று. சிந்தாமணி என்னும் காப்பியப் பெருங்கோயில், நச்சினார்க்கினியர் உரை என்னும் நந்தா விளக்கால் பொலிவு பெறுகின்றது. அக் கோயிலின் அழகு, விளக்கின் சுடரொளியால் மிகுகின்றது. காப்பியப் பெருங்கோயினுள் நுழைந்து காண்பவர் கண்களை, நச்சினார்க்கினியர் ஏற்றி வைத்த சுடர்விளக்கு, கவர்ந்து பேரின்ப மூட்டுகின்றது. சீவகசிந்தாமணிக்கு நச்சினார்க்கினியர் இயற்றியுள்ள உரையின் திறத்தை உரைச் சிறப்புப் பாயிரம், திருத்தகு முனிவன் கருத்துஇது என்னப் பருப்பொருள் கடிந்து பொருள்தொடர்ப் படுத்து வினையொடு முடியப் புனையுரை உரைத்தும் என்று போற்றுகின்றது. தேவர் தந்த காப்பியச் சிந்தாமணியைச் சிறந்த இலக்கியமாய் - கலைத்திறன் மிக்க காப்பியமாய்க் கண்டு மகிழ்ந்த நச்சினார்க்கினியரின் உரைத்திறன் பலமுறை கற்றுப்போற்றத் தக்கதாகும். சிந்தாமணி, நச்சினார்க்கினியரால் பட்டை தீட்டப் பெற்று வண்ணச் சுடரொளியை பலவகையாய் வீசி மகிழ்விக்கின்றது. இவ்வுரை விளக்கம் தேவரின் புலமை மாண்பை நன்கு வெளிப்படுத்துகின்றது. தேவரின் புலமை வளத்தை அளந்து காணும் திறன் நச்சினார்க்கினியரிடம் உள்ளது. சைவ சமயத்தைச் சேர்ந்த அந்தணரான நச்சினார்க்கினியர், ஜைன சமயக் காப்பயிமாகிய சிந்தாமணிக்கு நடுநிலையோடு, சமயக் காழ்ப்பு இன்றி உரை எழுதும் பணியை மேற்கொண்டு செம்மையாய்ச் செய்து முடித்துள்ளார். முதலில் இவர் சிந்தாமணிக்கு ஓர் உரை இயற்றி, ஜைன சமயச் சான்றோர்களிடம் காட்டியபோது அவ்வுரை நன்கு அமையவில்லை என்று மறுத்தனர்; பின்னர் ஜைன சமயக் கருத்துக்களை நன்கு ஆய்ந்து தெளிந்து மீண்டும் புதிய உரை விளக்கம் எழுதி அச்சான்றோர்களின் பாராட்டைப் பெற்றார் என்று அறிஞர்கள் கூறுகின்றனர். |