பக்கம் எண் :

263ஆய்வு

     மன்னுடை வேல் (1200)-அரசர் கெடுதற்குக் காரணமான வேல்.

     வாக்கு அமை உரு (1258)-கவிகளால் புகழ்தல் ஆகா வடிவு.

     நன் குரங்கு (1997)-பொல்லாங்குக்கு நன்றான குரங்கு.

     இரும்பு உண்டு மிகுத்த மார்பு (2281)-இரும்பு (வாள் வேல் முதலியன)
மேய்ந்து பசி தீர்ந்து மிகுத்து வைத்த மார்பு.

     நுண்கருத்து: பாட்டில் அமைந்துகிடக்கும் நுண்ணிய கருத்துகளை
வெளிப்படுத்துவது நச்சினார்க்கினியர் இயல்பு. “அம்மி மிதந்து ஆழ்ந்து சுரை
வீழ்ந்தது” (495) என்பதற்கு, “ஆழ்தற்குரிய அம்மி மிதந்து மிதத்தற்குரிய
சுரை ஆழ்ந்து வீழ்ந்தது என்றது, உயர்ந்தோர் வாழாதே தாழ்ந்தோர்
வாழ்ந்ததனை” என்று விளக்கம் எழுதுகின்றார்.

     குணமாலையும் சுரமஞ்சரியும் தந்த சுண்ணப் பொடிகளில் சிறந்ததைத்
தேர்ந்தெடுக்கச் சீவகன் அழைத்த ‘சுரும்பு வண்டு தேனீ மிஞிறு (892) ஆகிய
நால்வகையான ‘தாதுண் புறவை’களை நச்சினார்க்கினியர், வேறுபாடு காட்டி
விளக்குகின்றார். அவற்றிற்குச் செவியுணர்வு உண்டா என்ற வினாவை
எழுப்பிக் கொண்டு விடை கூறுகின்றார். இங்கே அவருடைய நுண்மாண்
நுழைபுலம் வெளிப்படுகின்றது.

     நந்தட்டன், சீவகனைப் பேணிக் காக்கும் முறையைப் பதுமுகனுக்கு
உரைக்கும்போது, “பகைவர்கள் சீவகனைக் கொல்ல, சூடும்மாலை பூசும்சாந்து
உடுக்கும் உடை அணி ஆகியவற்றில் நஞ்சு கலந்து விடுதல் கூடும். ஆதலின்
அவற்றை அன்னத்தின் கண்ணிலும், சக்கரவாகப் பறவையின் முகத்திலும்
ஒற்றி ஆராய்ந்து மேற்கொள்க: சீவகனுக்கு உண்ணத் தரும் நீரையும்
அமுதையும் முன்னதாகக் கருங்குரங்கிற்கு இட்டு ஆராய்க” என்கின்றான்
(1893). இப் பகுதியை அறிந்துகொள்ள நச்சினார்க்கினியர் தரும் விளக்கமே
உதவி செய்கின்றது. “அன்னம் கண் குருதிகாலும்; சக்கரவாகம் முகங்கடுக்கும்;
கருங்குரங்கு உண்ணாது” என்ற உரை விளக்கம் இன்றேல் பாடலின்
நுண்கருத்து ‘வெளிப்படாது.

     முத்தி இலம்பகத்தில் ‘வேள்வியாய்’ (2787) என்று தொடங்கும்
செய்யுளில், “வாரணத்தின் ஈர்உரி போல் கோள் இமிழ்ப்பு நீள்வலையாய்க்
கண்படுத்தும்” என்ற பகுதியை விளக்கும்போது, “யானையின் பசுந்தோல்
பிறர் உடம்பில் பட்டால் கொல்லும் என்றுணர்க” என்று எழுதுகின்றார்.
இந்த விளக்கமே மேலே குறிப்பிட்ட பாடலுக்கு ஒளிதந்து மகிழ்வூட்டுகின்றது.