பக்கம் எண் :

உரையாசிரியர்கள்264

     உவமை விளக்கம்: உவமைகளின் பொருத்தத்தை இவர் நன்கு
விளக்குகின்றார். எளிய உவமைகளும் இவர் தரும் விளக்கத்தால்
சிறப்படைகின்றன. உவமை விளக்கம் சிலவற்றைக் காண்போம்:

     சச்சந்த மன்னனைக் ‘களிறு அ(ன்)னான்’ (200) என்று சிறிய
உவமையால் குறிப்பிடுகின்றார் தேவர். நச்சினார்க்கினியர், மதச் செருக்கால்
(யானை), பாகன் தோட்டியை நீவுமாறு போலக் காமக்களிப்பால், தன்
அமைச்சர் கூற்றைக் கடத்தல் நோக்கி, ‘களிறு அனான்’ என்றார்” என்று
விளக்கம் தருகின்றார்.

     கட்டியங்காரன் வயப்பட்ட சச்சந்தன் படையைத் தேவர்,

        உப்புடைய முந்நீர் உடன்று கரை கொல்வது
       ஒப்புடைய தானை                             (280)

என்று உவமையுடன் சிறப்பிக்கின்றார். அவ்வுவமையை, “தனக்கு வேலியாகிய
கரையைக் கடல் தானே கொல்லுகின்றாற்போல, தனக்குக் காவலாகிய
அரசனைப் படைதாமே கொல்லுகின்றது என்றார்” என்று விளக்குகின்றார்.

     ‘கந்துக்கடன் மாரி போலவும் கற்பகம் போலவும் கொடை தந்தான்’
என்று தேவர் கூறிய உவமைகள் (865), “கார் வேண்டாமைக் கொடுத்தலும்,
கற்பகம் வேண்டக் கொடுத்தலும் இயல்பு” என்ற விளக்கத்தால்
சிறப்படைகின்றன.

     சீவகனை ‘ஈயின்றி இருந்த தேன்’ என்ற தேவர் குறிப்பிடுகின்றார் (712).
உரையாசிரியர், “இதற்கு முன்பு ஒரு மகளிரும் இவனை நுகராது இருந்தமை
உணர்ந்து” அங்ஙனம் கூறியதாகக் குறிப்பிடுகின்றார்.

     படநாகம் தோல் உரித்தாற் போல் துறந்து

என்ற உவமைக்கு (1546), “படநாகம் தோல் உரித்தாற் போல அகமும்
புறமும் துறந்து” என்றும், “நாகம் தோல் உரிக்கும் பொழுது நஞ்சும் காலும்”
என்றும் விளக்கம் தருகின்றார்.

     மதங் கொண்ட யானை,

       கடலென, காற்றென, கருங்கண் கூற்றென
       உடல்சின உருமென ஊழித் தீயென              (973)

தோன்றியதாகத் தேவர் உரைக்கின்றார். நச்சினார்க்கினியர், “முழக்காற்
கடலென, கடுமையாற் காற்றென, கொடுமையாற் கூற்றென, கோபத்தால்
இடியென, சேரக் கோறலின் ஊழித் தீயெனத் தோன்றிற்று” என்று
விளக்கும்போது உவமைகள் புதியனவாய்ப் பொலிகின்றன.