இலக்கணையைச் சீவகன், கரும்பே தேனே அமிர்தே காமர் மணியாழே அரும்பார் மலர்மேல் அணங்கே மழலை அன்னமே சுரும்பார் சோலை மயிலே குயிலே சுடர்வீசும் பெரும்பூண் மன்னன் பாவாய் பூவாய் பிணைமானே (2452) என்று பலவாறு பாராட்டுகின்றான். இதற்கு நச்சினார்க்கினியர் எழுதும் விளக்கம் பலமுறை கற்று இன்புறத் தக்கதாய் உள்ளது: “கணவற்கு மெய்ம் முழுதும் இனிதாய் இருத்தலின் கரும்பு. நல்லார் உறுப்பெல்லாம் கொண்டு இயற்றலின் தேன். இவ்வுலகில் இல்லாத மிக்க சுவையும் உறுதியும் கொடுத்தலின் அமிர்து. காமவேட்கையை விளைவித்து இனிய பண் தோற்றலின் மழலையையுடையதொரு யாழ், கணவற்குச் செல்வத்தைக் கொடுத்தலின் திரு. நடையால் அன்னம். சாயலால் மயில். காலமின்றியும் கேட்டார்க்கு இன்பம் செய்தலின் குயில். மன்னன் மகளே என்றல் புகழன்மையின் மன்னன் பாவாய் என்றது அவன் கண்மணிப் பாவை என்பது உணர்த்திற்று; இனி இவள் கொல்லிப் பாவையல்லள், மன்னன் பாவை என்றுமாம், சேடியர் கற்பித்த கட்டளை தப்பாமற் கூறலின் பூவை, நோக்கத்தால் மான்”. உலகியல் உரைத்தல்: பல பாடல்களை ஒரு தொடராக்கி உரை எழுதுவது நச்சினார்க்கினியர் பண்பு. இவ்வாறு எழுதுவதில் சிறந்த பயன் இருப்பதாய் இவர் கருதுகின்றார். பதுமையைப் பாம்பு தீண்டிய செய்தியை, சீவகனும் உலோக பாலனும் இருக்குமிடத்திற்கு ஒருவன் வந்து கூறுகின்றான். இச்செய்தியைத் தேவர் எட்டுப் பாடல்களில் (1266-1273) அமைந்துள்ளார். பதுமையின் வரலாறு அழகு ஆகியவற்றை முதலில் கூறிய பின், அவள் சோலையில் முல்லைக் கொடி வளர்த்த செய்தியை உரைத்து, அது பூத்த போது, மலர் கொய்ய அவள் செல்ல அங்கே பாம்பு தீண்டிற்று என்று வந்தவன் கூறுவதாகத் தேவர் பாடியுள்ளார். பாடல்கள் இருக்கும் அமைப்பிலேயே பொருள் எழுதாமல் நச்சினார்க்கினியர், அப்பாடல்களை எல்லாம் ஒரே தொடராக இணைத்துப் பாம்பு கடித்த செய்தியை முதலில் கூறி மற்றச் செய்திகளைப் பின் கூறுவதாய் அமைத்துள்ளார். இவ்வாறு செய்ததற்குக் காரணம் கூறும்போது, “இங்ஙனம் ‘மாட்டு’ உறுப்பாகக் கூறாது செவ்வனே கூறின் பாம்பு |