கடித்தமை கடுகக் கூறிற்று ஆகாமை உணர்க” என்று உலகியலை நினைவூட்டி விளக்குகின்றார். விளக்காத கதைகள் பஞ்சதந்திரக் கதைகளில் சில, தமிழ்க் காப்பியங்களில் இடம் பெற்றுள்ளன. கீரியைக் கொன்ற பார்ப்பனி கதை சிலப்பதிகாரத்திலும் (15:54- 75), ஆண் புறாவைக் கொன்று கையில் வைத்துக்கொண்டு காட்டில் மரத்தின் கீழ்க் காற்றுமழையில் நனைந்து பசியுடன் குளிரால் நடுங்கிக்கொண்டிருந்த வேடனின் குளிரைப் போக்கக் கொள்ளிக்கட்டை ஒன்றைத்தந்து, அவன் பசியைப்போக்கத் தானும் நெருப்பில் வீழ்ந்து மாண்ட பெண் புறாவின் கதை கம்பராமாயணத்திலும் இடம் பெற்றுள்ளன.* இத்தகைய கதைகள் சீவகசிந்தாமணியிலும் வருகின்றன. கடத்திடைக் காக்கை ஒன்றே ஆயிரங் கோடி கூகை இடத்திடை அழுங்கச் சென்(று) ஆங்(கு) இன்னுயிர் செகுத்த தன்றே - 1927 முழையுறை சிங்கம் பொங்கி முழங்கிமேற் பாய்ந்த மைதோய் வழையுறை வனத்து வன்கண் நரிவலைப் பட்ட தன்றே - 1928 இவை இரண்டும் பஞ்சதந்திரக் கதைகளை நினைவூட்டுகின்றன. ஆனால் இரண்டாவதாக உள்ள கதையில் சிறிது மாறுபாடு உள்ளது. ‘சிங்கத்தைக் கொன்ற முயல்’ கதையைப் பஞ்சதந்திரம் கூறுகின்றது. ஆனால் சிந்தாமணியோ சிங்கத்தை நரி கொன்றதாகக் குறிப்பிடுகின்றது. பஞ்சதந்திரக் கதைகளை ஒத்த வேறு சில கதைகள் தமிழ் நாட்டில் வழங்கி வந்தனவோ என்ற ஐயம் எழுகின்றது. தந்திரத்தில் வல்லதாய் - சூழ்ச்சி செய்து பிறரைக் கொல்வதில் தேர்ந்ததாய்க் குள்ளநரி தமிழ்நாட்டுக் கதைகளில் வருகின்றது. சிங்கத்தைச் சூழ்ச்சியால் நரி கொன்ற கதை ஒன்று அக் காலத்தில் வழங்கி இருக்கலாம். அக் கதையினையே சிந்தாமணி கூறுகின்றது என்னலாம். அக்கதையின் உண்மை வடிவத்தை அறியத்தக்க சான்றுகள் இல்லை. * யுத்தகாண்டம், 4. விபீடணன் அடைக் - 112. ‘பேடையைப்பிடித்து ...... விழுதன்றோ’ பதினெண் கீழ்க்கணக்கில் - சிறுபஞ்சமூலத்தில் (100), கங்கைக் கரையில் மைனாவுக்கும் முயலுக்கும் வழக்குத்தீர்த்த பூனைக் கதை உள்ளது. ‘உண்ணிடத்தும் ...... கடை’ |