ஆங்காங்கே வெளியிட்டுள்ளார். அத்தகைய இடங்களில் சிலவற்றைக் காண்போம். சீவகனுக்கு இசையில் தோற்ற காந்தருவதத்தை அவனுக்கு மாலையிடுகின்றாள். அதனைக் கண்டு பொறாமை கொண்ட கட்டியங்காரனும் மற்ற மன்னர்களும் சீவகனை எதிர்த்துப் போரிடுகின்றனர். சீவகன் அவர்களை வென்று வாகை சூடுகின்றான். இந்த போரில் காந்தருவதத்தையின் தந்தை கலுழவேகன் சீவகனுக்கு உதவி செய்திருக்கலாம். பலவகை ஆற்றல்கள் படைத்துள்ள அவன் போரில் ஈடுபட்டிருந்தால் கதை நிகழ்ச்சிகளில் தடைகள் பல ஏற்பட்டிருக்கும். ஆதலின் காப்பயிம் படைத்த தேவர், கலுழவேகனைப் போரில் ஈடுபடுத்தவில்லை. இதனை உணர்ந்து கொண்ட நச்சினார்க்கினியர், “கலுழவேகன் வந்தால் சீவகன் கதை ஒன்றும் இன்றாம்” (846) என்று விளக்கியுள்ளார். சீவகனின் வளர்ப்புத் தந்தையாகிய கந்துக்கடன் இறந்து போன செய்தியை எவ்விடத்திலும் குறிப்பிடாத தேவர், அவன் மனைவி சுநந்தை துறவு பூண்டதை முத்தி இலம்பகத்தில் கூறுகின்றார் (2927). இவ்விடத்தில் நச்சினார்க்கினியர், “கந்துக்கடன் இறந்தமை இத் தொடர் நிலைச் செய்யுளில் தேவர் கூறிற்றிலர், தகுதியன்று என்று கருதி; இத்துறவால் உயர்த்துணர வைத்தார்” என்று விளக்கியுள்ளார். இத்தகைய இடங்களில் எல்லாம் நச்சினார்க்கினியரின் காப்பிய நோக்கு வெளிப்படுகின்றது. மரபு காத்தல் வழி வழியாக வருகின்ற இலக்கிய மரபை நினைவிற் கொண்டு இவர் பல இடங்களில் உரை எழுதுகின்றார். அத்தகைய இடங்களில் ஒன்றினைக் காண்போம்: கனக மாலை, சீவகன் பிரிவால் வாடித் துன்பமிகுதியால் தனித்து இருக்கின்றாள். சீவகனின் தம்பியாகிய நந்தட்டன் கனக மாலையைச் சந்திக்கின்றான். இக்காட்சியைத் தேவர், திங்கள்வாள் முகமும் நோக்கான் * * * செங்கயற் கண்ணி னாள்தன் சீறடிச் சிலம்பு நோக்கி எங்குளார் அடிகள்?’ என்னா இன்னணம் இயம்பி னானே -1705 என்ற பாடலில் அமைத்துள்ளார். |