இப்பாடலுக்கு உரை காணும்போது நச்சினார்க்கினியர், தமிழ் இலக்கிய மரபை நினைவிற்கொண்டு சிறப்பான முறையில் விளக்கம் தருகின்றார். சொற்பொருள் கூறிப் பாடலை உள்ளவாறே விளக்கிச் செல்லாமல், பாடலின் இடம்பெறாத நிகழ்ச்சிகளை வருவித்து உரையில் அமைத்துக் கொண்டு விளக்குகின்றார். இவ்வாறு இவர் செய்வதற்குச் சிறந்த காரணங்கள் உள்ளன. * 1. நந்தட்டன், கனகமாலையின் அடிகளில் உள்ள சிலம்புகளை மட்டும் நோக்கிப் பேசுகின்றான் என்று பாடல் கூறி, சிறந்த பண்பாட்டை வெளிப்படுத்துகின்றது. என்றாலும் அவன் நோக்காத-நோக்கக் கூடாத - நோக்கக் கருதவும் கூடாத கனக மாலையின் மற்ற உறுப்புகளை நோக்கவில்லை என்று பாடல் உரைப்பது நயமாக இல்லை. 2. அவன் நோக்கவில்லை என்று கூறப்படும் கனக மாலையின் உறுப்புகளின் அழகு, இன்பச் சுவை தோன்றுமாறு புனையப்பட்டுள்ளது. 3. கணவன் பிரிவால் வருந்துகின்றவளின் உறுப்புகள் எழில் நலம் உடையவையாய்ப் பாடல் கூறுவது பொருத்தமில்லை. 4. பிரிவு துன்பம் வெளிப்பட்டு இரக்க உணர்வு தோன்ற வேண்டிய இடத்தில் இன்பச்சுவை தோன்றி, சுவை நலத்தைக் கெடுத்துவிடுகின்றது. இவற்றை எல்லாம் எண்ணிப்பார்த்த நச்சினார்க்கினியர் அந்த பாடலுக்கு இலக்கிய மரபிற்கு ஒத்தவாறு பின்வரும் விளக்கத்தைத் தருகின்றார்: “கயற்கண்ணினா ளுடைய, முன்பு திங்களை ஒக்கும் முகத்தில் இப்போது நிகழ்கின்ற வாட்டத்தையும் நோக்கானாய்-முன்பு நன்றாகிய (மார்பு) இப்பொழுது பசந்த பசப்பையும் நோக்கானாய்-முன்பு கலாபம் மின்னும் (இடையில்) ஆடை மாசுகண்ட தன்மையும் நோக்கானாய் தான் இறைஞ்சி நிற்றலின், அடியிற் சிலம்பு ஒன்றையுமே நோக்கி, எங்குளார் அடிகள்?” என்று இப்படி ஒரு வார்த்தை கூறினான் என்க” இந்த உரைப்பகுதியில் நச்சினார்க்கினியர், பாடலில் இல்லாத சில நிகழ்ச்சிகளைப் புனைந்து கூறியுள்ளார். * முதல் உலகத் தமிழ் மாநாட்டு ஆராய்ச்சித் தொகுதி (II 1968) பக்கம் 473-485. டாக்டர் க. ஆறுமுகம். |