பக்கம் எண் :

271ஆய்வு

     1. பாடல் கூறுகின்ற கனகமாலையின் உறுப்பழகும் உடைவனப்பும்,
முன்னைய நிலையில் அமைந்திருந்தவையாக் கூறியுள்ளார்.

     2. இப்போதுள்ள நிலையில், பிரிவுத் துன்பத்தால் உறுப்புகள் பசந்தும்,
உடை மாசடைந்தும் இருப்பதாய் மாற்றியுள்ளார்.

     3. கனகமாலை, பிரிவால் வாடி மெலிந்திருந்தும் கூட அவளை
நோக்காமல், அவள் அடியில் உள்ள சிலம்பை மட்டுமே நோக்கி நின்றான்
நந்தட்டன் என்று அமைந்துள்ளார்.

     4. கனக மாலையின் துன்பநிலை கண்ட நந்தட்டன் பேசவும் இயலாத
நிலையில் அமைதியாய்த் தானும் துன்பத்துடன் நின்றான் என்கிறார்.

     இத்தகைய விளக்கங்களால் தேவர்பாடல் சிறப்படைகின்றது; இலக்கிய
மரபு காக்கப்படுகின்றது.

அறிவுரை

    செகவீரபாண்டியனார், சிந்தாமணி தந்த தேவரை,

       காமத்தின் சுவைகண்டார் காமநூல்
         என்கின்றார்; தரும நீதித்
      தாமத்தின் நிலைகண்டார் தருமநூல்
         என்கின்றார்; தவங்கள் சார்ந்த
      நாமத்தின் நலம்கண்டார் ஞானநூல்
         என்கின்றார்; நயத்தோர்க் கெல்லாம்
      சேமத்தை அருளுகின்ற சீவகசிந்
         தாமணியைச் செய்து தந்தாய்!

என்று போற்றிப் பாடுகின்றார்.

     சிந்தாமணிக்கு மறவுரை கண்டவர் உண்டு; காமவுரை கண்டர் உண்டு;
அறவுரை கண்டவர் நச்சினார்க்கினியர். இவரது அறவுரையைக் கேட்போரே
பயனடைவர்.

       மறவுரையும் காமத்து உரையும் மயங்கிப் 
      பிறவுரையும் மல்கிய ஞாலத்து-அறவுரை
      கேட்கும் திருவுடை யாரே பிறவியை
      நீக்கும் திருவுடை யார்.
                                       அறிநெறிச்சாரம்-2