அணிந்துரை வித்துவான் க. வெள்ளைவாரணன் தமிழ் நலம் வளரத் தொண்டுபுரியும் புலமைச் செல்வர்களை நூலாசிரியர் உரையாசிரியர் போதகாசிரியர் என மூவகையினராக வகைப்படுத்துரைப்பர் சான்றோர். இம் முத்திறத்தாருள் நூலாசிரியரது மனக்குறிப்பினை உய்த்துணர்ந்து போதகாசிரியர்க்குத் தெளிய அறிவிக்கும் நுண்ணுணர்வும் சொல்வளமும் ஒருசேரப் பெற்றவர்கள் உரையாசிரியர்களே யாவர். தொல்காப்பியர் திருவள்ளுவர் இளங்கோவடிகள் முதலிய பெரும்புலவர்கள் இயற்றிய சிறந்த நூல்களைப்போலவே, அவற்றின் பொருள் நலங்களை இனிது விளக்கும் நோக்கத்துடன் இளம்பூரணர், பேராசிரியர், சேனாவரையர், நச்சினார்க்கினியர், பரிமேலழகர், அடியார்க்கு நல்லார் முதலிய பெருமக்கள் இயற்றிய உரைகளும் சிறப்புடையனவாக அறிஞர்களாற் பாராட்டிப் பயிலப் பெற்று வருகின்றன. தமிழ் வளர்ச்சிக்கு ஆக்கந்தரும் முறையில் அமைந்த இவ்வுரைகளை இயற்றியுதவிய புலமைச் செல்வர்களாகிய உரையாசிரியர்களின் வரலாறுகளும் அன்னோரது மதிநுட்பமும் ஆராய்ச்சி வன்மையும் உலகியலறிவும் பல்கலைப்புலமையும் அவர்கள் வாழ்ந்த காலச் சூழ்நிலைகளும் ஆகியவற்றை ஆராய்ந்துணர்தல், தொல்காப்பியம் சங்கச் செய்யுட்கள திருக்குறள் முதலிய பழந்தமிழ் நூல்களை ஆழ்ந்து பயில்வார்க்குப் பெரிதும் துணைபுரிவதாகும். இத் தமிழ்ப் பணியின் இன்றியமையாமையினை நன்குணர்ந்த திரு. மு. வை. அரவிந்தன், இறையனார் களவியல் உரை முதல் இன்று வெளிவந்து வழங்கும் உரை ஈறாகவுள்ள சி்றந்த தமிழிலக்கண இலக்கிய உரைகளை நுனித்துணர்ந்து அவ்வுரையாசிரியர்களின் வரலாறுகளையும் அவர்களியற்றிய உரைகளின் சொற்பொருள் மாண்புகளையும் கலை பயிலும் மாணாக்கர்களுக்கு அறிமுகஞ் செய்யும் நோக்குடன் |