பக்கம் எண் :

உரையாசிரியர்கள்28

‘உரையாசிரியர்கள்’ என்னும் சிறந்த ஆராய்ச்சி நூலை இயற்றியுள்ளார்.

     இந்நூல், தமிழ்மொழியில் உரைநூல்கள் தோன்றி வளர்ந்த
வரலாற்றினையும் இளம்பூரணர் முதல் சிவஞான முனிவர் ஈறாகவுள்ள
பண்டையுரையாசிரியர்கள் தம் புலமைத் திறத்தால் தமிழ் மொழிக்கு ஆற்றிய
அரும்பெருந்தொண்டுகளையும் அவர்களைப் பற்றிய வரலாற்றுச்
செய்திகளையும் அவர்களுடைய உரைகளின் வாயிலாகப் புலனாகும் உரை
நுட்பம், கருத்து வளம், பொருள் மாண்பு, அவர்கள் காலச் சமுதாய வாழ்வு
முதலிய பெரு நலங்கலையும், அவர்களைப்பற்றி அறிஞர் இதுவரை
ஆராய்ந்து கண்ட அரும் பொருள்களையும், இக்கால உரையாசிரியர்களின்
உரைவகைகளையும் விரிவாக ஆராய்ந்து விளக்குகின்றது. தமிழிலக்கண
இலக்கிய நூல்களை ஆய்ந்து பயில விரும்புவோர் அனைவருக்கும் இனிய
அறிவு விருந்தாகச் சுவை தரும் முறையில் இந்நூல் அமைந்துள்ளது.

     ஆங்கில மொழியுடன் அருந்தமிழ் நூல்களில் நிறைந்த பயிற்சியும்
ஆழ்ந்த புலமையும் ஒருங்கு வாய்க்கப்பெற்ற அறிஞர் அரவிந்தன் அவர்கள்
தமது நுண்மாணுழை புலமும் காய்தலுவத்தலகற்றி ஆராயும் ஆராய்ச்சி
நலமுந்தோன்ற இந்நூலைத் தெளிந்த செந்தமிழ் நடையில் இயற்றியுள்ளமை
அறிஞர்களாற் பாராட்டத்தக்க சிறந்த தமிழ்ப் பணியாகும். கலைபயில்
தெளிவும், கட்டுரை வன்மையும் உலகியலறிவுடன் உயர்குணம் பலவும்
நிரம்பிய அன்பர் அரவிந்தன் அவர்கள் தமிழுக்கு ஆக்கமாகும் வகையில்
இதுபோன்ற ஆராய்ச்சி நூல்கள் பல இயற்றி எல்லா நற்பேறுகளும் இனிது
பெற்று நீடு வாழ்க எனத் தில்லைச் சிற்றம்பலவன் திருவடிகளைச் சிந்தித்து
வாழ்த்துகின்றேன்.

க. வெள்ளைவாரணன்