பக்கம் எண் :

29

மதிப்புரை

டாக்டர் சி. பாலசுப்பிரமணியம், எம்.ஏ., எம்.லிட்., பிஎச்.டி.,

(முன்னைத் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம்)

     இலக்கண வரம்புடன் இலக்கிய வளத்துடனும் இயல்பாக வளர்ந்துவரும்
தமிழ்மொழியினைக் காலந்தோறும் வாழ்ந்த புலவர் பெருமக்களும்
வேந்தர்களும் நன்கு புரந்து காத்து வந்தார்கள். தமிழ் இலக்கியப் பேரியாறு
தடைபடாமல் முப்பது நூற்றாண்டுகளுக்கும் மேலாகச்சீரோடும் சிறப்போடும்
அழகு நடை போட்டு  ஓடிவருகின்றது. இப் பேரியாறு கொண்டுவந்த
வளத்தினையும் வாழ்வினையும் கணக்கிட்டுப் பார்க்கும்பொழுது நமக்கு
வியப்புப் பெருகுகின்றது. அவ்வளவிற்குப் பல்வேறு துறை நூல்கள் புலவர்தம்
அறிவாற்றல்களின் வினைவாக நமக்குப் படைப்பிலக்கியங்களாகக்
கிடைத்துள்ளன. கால வெள்ளத்தையும் கடல் வெள்ளத்தையும் நீந்தி,
செல்லுக்கு இரையாகாமல் தப்பிப் பிழைத்துத் தமிழர்தம் கவனக் குறைவையும்
கடந்து நல்ல பல இலக்கியங்களும் உரை நூல்களும் நமக்குக்
கிடைத்திருக்கின்றன என்றால் தழிழர் தவமுடையர் என்பதில் ஐயுறவில்லை.

     ‘சங்க இலக்கியம் ஒரு வாழைத் தோட்டம்’ என்பர் அறிஞர். வாழையடி
வாழையென வந்த புலவர் திருக்கூட்டம் கண்ட நூல்களிற் பலவும்
உரையின்றி நடந்த காலம் ஒன்றிருந்திருக்கலாம். ஆயினும் தொல்காப்பியனார்
காலத்திலேயே உரைநடை தோன்றி விட்டதென்பதற்கு ‘உரைவகை நடையே
நான்கென மொழிப’ என முடியும் தொல்காப்பிய நூற்பாவே சான்றுபகரும்.
மூல நூல்கள் தோன்றிய காலத்திலேயே அவற்றிற்கு உரையும்
தோன்றிவிட்டன எனக் கூறல் இயலாது. ஆயினும் சில நூல்களுக்கு
நூலெழுதிய ஆசிரியரே உரையையும் வகுத்துச் சென்றிருக்கக் காணலாம்.
“உரையின்றிச் சூத்திரத் தானே பொருள் நிகழ்ந்த காலமும் உண்டு” என்றும்,
“உதாரணங் காட்டல் வேண்டாமையை உணர்ந்து உரை நடந்த காலமும்
உடையவாகும் முற்காலத்து