என்று வேறு பாடம் கொண்டு, அந்தப் பாடத்தின் பொருத்தத்தைப் பின்வருமாறு ஆராய்கின்றார்: “உருபு எனப் பகர உகரமாகப் பாடம் ஓதில், அது வேற்றுமை உருபிற்கும் உவம உருபிற்கும் பெயராய் வடிவை உணர்த்தாது என்று உணர்க. அதுவென் உருபு கெட எனவும்; உருபினும் பொருளினும் மெய்தடுமாறி எனவும்; உருபு தொடர்ந்து அடுக்கிய எனவும்; தொக வருதலும் எனவும்; மெய்யுருபு தொகா எனவும்; யாதன் உருபின் எனவும் பிறாண்டும், வேற்றுமைக்கு உருபு என்றே சூத்திரம் செய்தவாறு காண்க. உவம உருபு என்றல் அவ் ஓத்தினுள் கூறிய உரைகளான் உணர்க” வினை முடிபு காட்டுதல்: கற்பியலில் (9), ‘பெறற்கரும் பெரும் பொருள்’ என்னும் நூற்பாவிற்கு உரை எழுதியபின், “இச் சூத்திரத்துக் கண், ஏழன் உருபும் அவ்வுருபு தொக்கு நின்று விரிந்தனவும்; செயின் என்னும் வினையெச்சமும் உரிய என்னும் குறிப்புவினை கொண்டன. அவற்றை, இன்னவிடத்தும் இன்னது செய்யினும் உரிய என்று ஏற்பித்து முடிக்க” | என்று முடித்துக் காட்டுகின்றார். வைப்புமுறை ஆய்தல் செய்யுளியலில் (190) ‘பாணன் கூத்தன் விறிலி’ என்னும் நூற்பா விளக்கத்தில், “இசைப் பின்னரது நாடகம் ஆதலின், பாணன் பின் கூத்தனும்; பெண்பால் ஆதலின் விறல்பட ஆடும் விறலி அவர் பின்னும்; அவ்வினத்துப் பரத்தை அவர் பின்னும்; அகப் பொருட்குச் சிறவாமையின், அறம் பொருள் கூறும் அறிவர் அவர் பின்னும்; ஏதிலாராகிய கண்டோர் அவர் பின்னும் வைத்தார்.” | என்று உரைக்கின்றார் கணக்கிட்டு மொழிதல்; இலக்கணத் கருத்துக்களைக் கணக்கிட்டு இத்தனை என்று கூறுவது இவர்க்கு இயல்பு. எழுத்ததிகாரத்தில் (68), “மொழிக்கு முதலாம் எழுத்து, தொண்ணூற்று நான்கு என்று உணர்க” என்றும்; “மொழிக்கு ஈறாக உள்ள எழுத்து, நூற்று அறுபத்து ஒன்று” (எழுத்-77) என்றும் கூறுகின்றார். தொகை மரபில் (13), ‘அஃறிணை விரவுப் பெயர் இயல்பு மாருளவே’ என்னும் நூற்பா உரையில், “ஆண்டு, நாற்பத்து எட்டுச் சூத்திரங்களான் முடிவதனை ஈண்டுத் தொகுத்தார்” என்று நூற்பாக்களை எண்ணி உரைக்கின்றார். |