சொல்லும் பொருளும் அரிய சொற்கள் சிலவற்றிற்குப் பொருள் எழுதியும் சில சொற்களுக்கு நுண்பொருள் வரைந்தும், சில சொற்களை ஆராய்ந்து கூறியும் நச்சினார்க்கினியர் உரை எழுதுவது வழக்கம். அவற்றுள் சிலவற்றை இங்கே காண்பாம். எழுத்ததிகாரம் ஞமலி-என்பது திசைச் சொல் (எழுத்-64) ஒழியிற்று என்றாற் போல்வன இழி வழக்கு (64) உதி-இஃது இக்காலத்து ஒதி என மருவிற்று (243) ஈம்-என்பது சுடுகாடு (328) கம்-தொழில் (328) அழக்குடம்-என்பது பிணக்குடத்தை (353) ஓ-என்பது மதகுநீர் தாங்கும் பலகை (180) சொல்லதிகாரம் உடைமை: உடைமைத் தன்மையும் உடைமைப் பொருளும் என இருவகைப்படும். உடைமைத் தன்மையாவது தன் செல்வத்தை நினைத்து இன்புறுவதற்கு ஏதுவாகிய பற்றுள்ளம். உடைமைப் பொருளாவது ஒன்றற்கு ஒன்றை உரிமை செய்து நிற்பது (215). பண்பு: ஒருபொருள் தோன்றும் காலத்து உடன் தோன்றி அது கெடும் துணையும் நிற்பது (216). பிற மொழிச் சொற்கள்: சிங்களம் அந்தோ என்பது, கருநாடகம் கரைய சிக்க, குளிர என்பன. வடுகு செப்பு என்பது. தெலுங்கு எருத்தைப் பாண்டில் என்பது. துளு மாமரத்தைக் கொக்கு என்பது. பெண்மை: கட்புலனாயதோர், அமைதித் தன்மை (57). சாயல்: மெய், வாய், கண், மூக்குச் செவி என்னும் ஐம்பொறியான் நுகரும் மென்மை (325). பொருளதிகாரம் கயந்தலை-யானைக்கன்று போலும் புதல்வன் (கற்-6). நெடுமொழி - மீக்கூற்றுச்சொல் (புறத்-8). அரும்பாசறை-அரியபாசறை. இரவும் பகலும் போர்த்தொழில் மாறாமை தோன்ற அரும் பாசறை என்றார் (கற்-34). நாற்பெயர் எல்லை அகத்தவர் - மலைமண்டலம் சோழ மண்டலம் பாண்டிய மண்டலம் தொண்டை மண்டலம் என்னும் நான்கு பெயருடைய தமிழ் நாட்டார் (செய்-79). |