கூத்தர் நாடக சாலையர் தொன்றுபட்ட நன்றும் தீதும் கற்றறிந்தவற்றை அவைக்கண், எல்லாம் அறியக் காட்டுதற்கு உரியர் (கற்-17); எண்வகைச் சுவையும் மனத்தின்கண்பட்ட குறிப்புகளும் புறத்துப் போந்து புலப்பட ஆடுவார் (புறத்-90). இசை: சொல்; எழுத்தினான் ஆக்கப்பட்டுப் பொருளறிவுறுக்கும் ஓசை ஆதலின் அதனை இசை என்றார். இஃது ஆகுபெயர். கந்தழி-ஒரு பற்றுக்கோடு இன்றி அருவாகித் தானே நிற்கும் தத்துவம் கடந்த பொருள் (புறத்-33). கூற்று: வாழ் நாள் இடையறாது செல்லும் காலத்திணைப் பொருள் வகையான் கூறுபடுத்தும் கடவுள் (புறத்-24). எடுத்துக் காட்டுகள் நச்சினார்க்கினியர் பல இடங்களில் தமக்கு முன் இருந்த உரையாசிரியர்கள் காட்டிய உதாரணங்களைப் பயன்படுத்தி இருப்பினும், சில உதாரணங்கள் இவரால் படைக்கப்பட்டவை; இவரது புலமைமாண்பை வெளிப்படுத்துபவை; இவர் காலத்து நாகரிகத்தை நினைவூட்டுபவை. பாம்பினிற் கடிது தேள் (எழுத்-131) என்ற உதாரணம் நம் நெஞ்சத்தில் நன்கு பதிகின்றது. பொன்னகல் நெய்யகல் (எழுத்-160) என்ற தொடர்கள் இவர் காலத்து நாகரிகத்தை உணர்த்துகின்றன. அவ்வூர்ப் பூசையும் புலால் தின்னாது (சொல்-257) என்ற எடுத்துக்காட்டு, பண்பாட்டின் சிறப்பைக் காட்டுகின்றது. பாட்டும் கோட்டியும் அறியாப் பயமில் தேக்கு மரம் போல் நீடிய ஒருவன் (சொல்-293) என்ற உதாரணம், கல்லாதவரிடத்து இவர்க்குள்ள வெறுப்பைக் காட்டுகிறது. இவர் காலத் தமிழகம் (விசய நகரப் பேரரசுக்குட்பட்ட) நாயக்கமன்னர்கள் ஆட்சியின் கீழ் இருந்தது. இருப்பினும் தமிழ் மூவேந்தர் மீது பற்றுடையவராய்ப் பின்வரும் உதாரணங்களைக் காட்டுகின்றர்: தமிழ் நாட்டு மூவேந்தரும் வந்தார் (சொல்-33). வடுகரசரும் வந்தார்; இனித் தமிழ் நாட்டு மூவேந்தரும் வரினும்வருவர் (சொல்-285). அறுவகைத் தொகையும் ஒருங்கு வந்த தொடருக்கு உதாரணமாக, ‘துடியிடை நெடுங்கண் துணைமுலைப் பொற்றொடி’ என்பதைக் காட்டுகின்றார் (சொல்-421). |