பக்கம் எண் :

279ஆய்வு

     தம் காலத்தில் வழங்கிவந்த ‘கரணம் பிழைக்கில் மரணம்’ என்ற
பழமொழியைத் தருகின்றார் (கற்பியல்-1).

     உள்ளுறை உவமம் ஏனை உவமம் ஆகிய இரண்டையும் சிறந்த
உதாரணங்கள் கூறி விளக்குகின்றர்:

     “பவளம் போலும் வாய் என்ற வழி, பவளமே கூறி வாய் கூறாவிடின்
உள்ளுறை உவமமாம். அவ்வாறு இன்றி, உவமிக்கப்படும் பொருளாகிய
வாயினையும் புலப்படக் கூறலின் ஏனை உவமம் ஆயிற்று” (அகத்-49).

உவமைச் சிறப்பு

    நச்சினார்க்கினியர் பிறர் கூறிய உவமைகளின் பொருத்தத்தைத் தம்
உரையில் விளக்குகின்றார். பாயிர உரையில் கற்கப் படாதோர் (கல்வி
கற்பிக்கத் தகுதியில்லா ஆசிரியர்) யாவர் என்பதைப் பின்வருமாறு
விளக்குகின்றார்:

         “இனிக் கற்கப்படாதோரும் நான்கு திறத்தார்:
         கழற்பெய் குடமே மடற்பனை முடத்தெங்கு
         குண்டிகைப் பருத்தியோடு இவைஎன மொழிப

     இதனுள் கழற்பெய் குடமாவது, கொள்வோன் உணர்வு சிறிதாயி்னும்
தான் கற்றதெல்லாம் ஒருங்கு உரைத்தல்.

     மடற்பனை என்பது, பிறராற் கிட்டுதற்கு அரிதாகி இனிதாகிய
பயன்களைக் கொண்டிருத்தல்.

     முடத்தெங்கு என்பது, ஒருவர் நீர்வார்க்கப் பிறர்க்குப் பயன்படுவது
போல ஒருவர் வழிபடப் பிறர்க்கு உரைத்தல்.

     குண்டிகைப் பருத்தி என்பது, சொரியினும் வீழாது சிறிது சிறிதாக
வாங்கக் கொடுக்கும்; அதுபோலக் கொள்வோன் உணர்வு பெரிதாயினும்
சிறிது சிறிதாகக் கூறுதல்.”

     நச்சினார்க்கினியர் தாமே சிறந்த உவமைகளைக் கூறிக் கருத்தை
விளக்குகின்றார். அவர் கூறும் உவமைகள் சிலவற்றைக் காண்போம்:

     ‘நூறு காணங் கொணர்ந்தான் என்றால், அவை பொதிந்த கூறையும்
அவையென அடங்குமாறு போல’

     ‘நூல் என்றது நூல் போறலின் ஒப்பினாயதோர் ஆகுபெயராம்.
அவ்வொப்பு ஆயவாறு என்னை எனின், குற்றங்களைந்து எஃகிய
பன்னுனைப் பஞ்சிகளை எல்லாம் கைவன் மகடூஉத் தூய்மையும் உடையவாக
ஓரிழைப்படுத்தினாற் போல’.

     ‘கோட்டு நூறும் மஞ்சளும் கூடிய வழிப் பிறந்த செவ் வண்ணம்
போல’.