பக்கம் எண் :

உரையாசிரியர்கள்280

     ‘எள்ளாட்டிய வழியல்லது எண்ணெண் புலப்படாதவாறு போல’.

     ‘நீர் தனித்து அளந்துழியும் நாழியாய், அரைநாழி உப்பிற் கலந்துழியும்
கூடி ஒன்றரை நாழியாய் மிகாதவாறு போல்வதோர் பொருட்பற்றி’.

     ‘மாத்திரை கொள்ளுங்கால் உப்பும் நீரும்போல ஒன்றேயாய் நிற்றலும்,
வேறுபடுத்துங்கால் விரலும் விரலும் சேர நின்றாற் போல வேறாய் நிற்றலும்
பெற்றாம்’.

ஆராய்ச்சியும் விளக்கமும்

     ‘எழுத்து’ என்பதனைப் பின்வருமாறு விளக்குகின்றார்:

     “எழுத்து என்றது யாதனை எனின், கட்புலனாகா உருவும் கட்புலனாகிய
வடிவும் உடைத்தாக வேறுவேறு வகுத்துக் கொண்டு, தன்னையே
உணர்த்தியும் சொற்கு இயைந்து நிற்கும் ஓசையையாம். கடல் ஒலி, சங்கொலி
முதலிய ஓசைகள் பொருளுணர்த்தாமையானும் முற்கு வீளை இலதை
முதலியன பொருள் உணர்த்தினவேனும் எழுத்தாகாமை யானும் அவை
ஈண்டுக் கொள்ளார் ஆயினர்”.

     இவ்வாறே எழுத்தை ‘உரு’ என்று கொள்ளவேண்டும் என்பதற்கும்,
இவர் கூறும் காரணங்கள் படித்து இன்புறத் தக்கவை (எழுத்-1).

     எழுத்துகளின் வைப்புமுறையும், இன் வற்று முதலிய சாரியைகளின்
வைப்புமுறையும் இவரால் நன்கு ஆராய்ந்து கூறப்பட்டுள்ளன.

     சொல்லதிகாரத்தில் (1), சொற்களைத் தனி மொழி, தொடர் மொழி என
இருவகைப் படுத்தி விளக்குகின்றார்:

     “சொல்தான், தனிமொழியும் தொடர்மொழியும் என இருவகைப்படும்.
தொடர்மொழி, இருமொழித் தொடரும் பன்மொழித் தொடரும் என
இருவகைப்படும். அவை தொடருங்கால் பயனிலை வகையானும் தொகைநிலை
வகையானும் எண்ணுநிலை வகையானும் தொடரும்.”

 சொல்   தனிமொழி
 தொடர்மொழி  இருமொழித் தொடர்  பயனிலைவகை
 தொகைநிலை வகை
 எண்ணுநிலை வகை
 பன்மொழித் தொடர்   பன்மொழித் தொடர்