நின்றுழி நிகழ்வும்; அது கொல்ல ஓடுவதைக் கண்டுழி எதிர்வும் விரியும்.” முன்னோர் மொழி முன்னோர் மொழிந்த பொருளையும், சொல்லையும் பொன்னேபோல் போற்றும் இயல்பினர் இவர். அகத்திணையியலுள், ‘ஒன்றாத் தமரினும்’ என்னும் நூற்பாவில் (41) உள்ள ‘புகழும் மானமும் எடுத்து வற்புறுத்தலும் என்ற அடிக்கு, “போகம் வேண்டிப் பொதுச்சொற் பொறுத்தல் அரசியல் அன்று” என்று விளக்கும் இடத்தில், புறநானூற்றுப் பாடல் (8) ஒன்றின் அடி இடம் பெற்றுள்ளது. குறுந்தொகைப் பாடல்கள் பலவற்றை மேற்கோள் காட்டும் இவர், சிலவற்றிற்கு நயவுரை கண்டுள்ளார். சொல்லதிகாரத்தில் வினையெச்சங்களை விளக்கும்போது, “கணவன் இனிது உண்டலின், காதலி முகம் மலர்ந்தது” என்று காட்டும் உதாரணம் ‘முளிதயிர் பிசைந்த’ என்னும் குறுந்தொகைப் பாடலை நினைவூட்டுகிறது. எச்சவியலில் (45) ‘ஒருமை சுட்டிய’ என்னும் நூற்பா உரையில் ‘தினைத்தாளன்ன சிறு பசுங்கால’ என்னும் பாடல் சிறந்த விளக்கம் பெறுகின்றது. செய்யுளியலில் (206), ‘செங்களம்பட’ என்ற முதற்பாடலுக்குரிய இருவேறு எச்சப் பொருளைக் குறிப்பிடுகின்றார். கலித்தொகை, இவரைக் கவர்ந்த நூல்களில் ஒன்று. செய்யுளியலில் கலிப்பா வகைகளுக்கு அந் நூலிலிருந்து பல உதாரணம் காட்டுகின்றார். கற்பியலில் ‘கரணத்தின் அமைந்த’ (5) என்னும் நூற்பாவில் உள்ள ‘மடம்பட வந்த’ என்னும் தொடரை விளக்கும்போது, கலித்தொகைப் பாடல் (7) ஒன்றின் அடிகளை உரைநடையாக்கி எழுதுகின்றார். அப்பகுதி பின்வருமாறு: “உடன்கொண்டு போதல் முறையன்று என்று அறியாமற் கூறலின், மடம்பட என்றார். செய்கையாவன; தலைவன் கைபுனை வல்வில் நாண் உளர்ந்தவழி, இவள் மையில் வாண்முகம் பசப்பூர்தலும்; அவன் புனைமாண் மரீஇய அம்பு தெரிந்தவழி, இவள் இனைநோக்கு உண் கண்ணீர் நில்லாமையும் பிறவுமாம்” இப் பகுதியில் கலித்தொகைப்பாடலின் (7) பல அடிகள் இடம் பெற்றுள்ளன; நீயே, செய்வினை மருங்கிற் செலவயர்ந் தியாழநின் கைபுனை வல்வில் ஞாணுளர் தீயே; இவட்கே, |