பக்கம் எண் :

உரையாசிரியர்கள்284

          ஞாயிறு போற்றுதும் ... திரிதலான்

எனவும் இவை குடையையும் செங்கோலையும் திகிரியையும் புனைந்தன”
என்று விளக்குகின்றார். எனவே, இளங்கோவடிகள் தம் காப்பியத்தில் சோழ
மன்னனின் குடை திகிரி முதலியவற்றைப் போற்றியதாகக் கருதுவது
பொருந்தும்.

     புறத்திணையியலில் (28), ‘காமப்பகுதி கடவுளும் வரையார்’ என்பதை
விளக்கும்போது,

     “காமப் பகுதி கடவுளாரைக் கூறுங்கால் பெண் தெய்வத்தோடு
இயல்புடையாரைக் கூறின்அன்றி, எண்வகை வசுக்கள் போல்வாரையும் புத்தர்
சமணர் முதலியோரையும் கூறப்படாது” என்று கூறுகின்றார்.

     “ஊரோடு தோற்றமும் பரத்தையர்க்கு அன்றி, குல மகளிர்க்குக்
கூறப்படாது” (புறத்-30) என்றும் உரைக்கின்றார்.

     இவை, முற்போக்குச் சிந்தனையாளரைப் பெரிதும் மகிழ்விக்கின்றன.

     தொல்காப்பியர், வேற்றுமைகளின் இலக்கணத்தைச் சொல்லதிகாரத்தில்
வேற்றுமையியல் வேற்றுமை மயங்கியல் விளிமரபு ஆகிய மூன்று பகுதிகளில்
விளக்கிக்கூறியுள்ளார்.

     சில ஆய்வாளர்கள், ‘இம் மூன்று இயல்களையும் தொகுத்து,
வேற்றுமைகளைப் பற்றிய கருத்துக்களை எல்லாம் ஒரே இயலில் கூறி
இருக்கலாமே’ என்று கருதுகின்றனர். நச்சினார்க்கினியரும் இவ்வாற
கருதியுள்ளார். செய்யுளியலில் (170), ‘நேரினமணியை’ என்னும் சூத்திர
உரையில், ‘நேரினமணி எனவே ஒரு சாதியினும் தம்மின் ஒத்தனவே கூறல்
வேண்டும். வேற்றுமை ஓத்தும். வேற்றுமை மயங்கியலும், விளிமரபும் என
மூன்றன் பொருளையும் ஒன்றாக வேற்றுமை’ என்னாது, வேறுவேறு
வைத்தமை காண்க’ என்று தம் ஆரய்ச்சித் திறனை வெளிப் படுத்துகின்றார்.

     இத்தகைய இடங்களில் எல்லாம், நச்சினார்க்கினியர் சிந்தனையாளர்
அரங்கத்திற்குத் தலைமை தாங்கும் தகுதி பெற்றுச் சிறந்து விளங்குகின்றார்.

முன்னோர் அடிச்சுவட்டில்

    இவர், பல இடங்களில் முன்னோர் அடிச்சுவட்டைப் பின்பற்றி
நடக்கின்றார். இளம்பூரணர் சுருக்கமாய்க் கூறிய கருத்தை இவர், அழகான
நடையில்-எதுகை மோனை அமைந்த சொற்களால் விரித்துக் கூறுகின்றார்.
முதல், கரு, உரி இவற்றை விளக்கியபின் காலம் அதற்குப் பொருந்தும்
வகையினைக் கூறும் முறையை