பக்கம் எண் :

285ஆய்வு

இவர் இளம்பூரணரிடமிருந்தே பெற்று அழகுபட விரித்து உரைக்கின்றார்.
அகத்திணைக்கு மறுதலையாய் அமையும் புறத்திணையின் பொருத்தம்
பற்றிய விளக்கமும் இளம்பூரணர் கருத்தின் அடிப்படையிலேயே
அமைக்கப்பட்டுள்ளது.

     புறத்திணையியலில் ‘முழுமுதல் அரணம்’ (8), என்பதற்கு “அரணிற்குக்
கூறுகின்ற இலக்கணம் பலவும் உடைத்தாதல்’ என்று சுருக்கமாக இளம்பூரணர்
கூறிச் சென்ற கருத்தினை நச்சினார்க்கினியர் மிக விரிக்கின்றார்.
சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி போன்ற இலக்கியங்களிலிருந்து பல
கருத்துகளை மேற்கொண்டு அரண் இலக்கணத்தை விரிக்கின்றார்.

     சொல்லதிகாரத்தில் சேனாவரையர் இளம்பூரணர் ஆகியோர் கருத்தைத்
தழுவி, விளக்கி எழுதும் இடங்கள் பல உள்ளன. எழுத்ததிகாரத்தில்
எழுத்திற்கு உருவம் உண்டு என்ற கருத்தும், பாயிரத்தில் கூறும்
கருத்தும் இளம் பூரணர் கூறியவையேயாகும். பல உதாரணங்களையும்
நச்சினார்க்கினியர் தம் முன்னோரிடமிருந்து மேற்கொள்ளுகின்றார்.

     செய்யுள் இயலுக்குப் பேராசிரியர் எழுதியுள்ள உரையையும் இவரது
உரையையும் ஒப்பிடும்போது எத்தனையோ ஒப்புமைகளைக் காணலாம்.
நோக்கு என்ற உறுப்பினை விளக்கும் போது பேராசிரியர் காட்டிய ‘முல்லை
வைந்நுனி’ என்ற (அகம்-4) பாட்டையே இவரும் மேற்கோள் காட்டி,
பேராசிரியரைப் பின் பற்றியே விளக்கம் எழுதுகின்றார்.

முன்னோரை மறுத்தல்

    நச்சினார்க்கினியர் முன்னோரை மறுத்து வேறுரை காணும் இடங்களும்
உண்டு. எழுத்ததிகாரத்தில் சில இடங்களில் இளம்பூரணர் கருத்தை
மறுக்கின்றார். சொல்லதிகாரத்தில் இளம்பூரணரை மறுப்பதோடு
சேனாவரையரையும் மறுக்கின்றார். ஓரிடத்தில், “சேனாவரையர், ஆசிரியர்
கருத்தும் சான்றோர் செய்யுள் வழக்கமும் உணராமல் கூறினார்” (சொல்-414)
என்று சிறிது வன்மையாகவே தாக்குகின்றார்.

     பொருளதிகாரத்தில் இளம்பூரணரை மறுத்து, வேறுரை காணும்
இடங்கள் பல உண்டு. பொருளியல் என்பது அகம் புறம் என்ற இரண்டின்
ஒழிபுகூறும் பகுதி என்பது இளம்பூரணர் கருத்து. நச்சினார்க்கினியர்,
“புறத்திணை இயலுள் புறத்திணை வழுக்கூறி, அகப்பொருட்கு உரிய வழுவே
ஈண்டுக் கூறுகின்றது என்று உணர்க” என்று கூறுகின்றார்.