திணைப்பெயர்கள் யாவும் நிலத்திற்குரிய முல்லை முதலிய பூக்களால் பெற்ற பெயர் என்பர் இளம்பூரணர் (அகத்-5). அக் கருத்தினை நச்சினார்க்கினியர் மறுத்துக் கூறுகின்றார். “இனி இவ்வாறன்றி முல்லை முதலிய பூவாற் பெயர் பெற்றன இவ் ஒழுக்கங்கள் எனின், அவ்வந் நிலங்கட்கு ஏனைப் பூக்களும் உரியவாகலின் அவற்றால் பெயர் கூறலும் உரிய எனக் கடாவுவார்க்கு விடைஇன்மை உணர்க” என்பது நச்சினார்க்கினியரின் மறுப்புரை. இறையனார் களவியல் உரையாசிரியரையும் இவர் மறுக்கும் இடங்கள் உண்டு (அகத் 3, 53). செய்யுளியலில் பேராசிரியரைச் சில இடங்களில் மறுக்கின்றார். செய்யுளுக்குரிய தொடை பற்றிய கணக்கை (செய்-109) இவர் வேறுவகையாய் விளக்கி நான்கு வேறு கருத்தினைக் கூறி, ‘இவற்றுள் நல்லது உய்த்து உணர்ந்து கொள்க’ என்று கூறுகின்றார். பிறர்க்கு விரித்த வலையில் தமக்கு முன் இருந்த உரைகளை மறுத்து, புதுஉரை காணமுயலும் நச்சினார்க்கினியர், சில புதிய கொள்கைகளை உருவாக்கிக் கொண்டு புதுவழி வகுக்கின்றார். ஆனால், தாமே அக் கொள்கைகளை மறந்து தாம் வகுத்த புதுவழியை விட்டு விலகிச் செல்கின்றார். அத்தகைய இடங்களில் இவர் உரையே இவர்க்கு மறுப்பாக அமைந்து விடுகின்றது. எழுத்ததிகாரத்தில், ஓரெழுத்து ஒருமொழி (45) என்னும் நூற்பா உரையில், “ஒற்றும் குற்றியலுகரமும் சொல்லில் இடம்பெறும் போது அவற்றைக் கணக்கிடக்கூடாது; ஏனெனில் செய்யுளியலில் தொல்காப்பியர் அவ்வாறு கூறியுள்ளார்” | என்று உரைத்து, வரகு கொற்றன் ஆகியவற்றை ஈரெழுத்து ஒரு மொழிக்கு உதாரணம் காட்டுகின்றார். ஆனால், இவ்வாறு கூறிப்பிறரை மறுத்ததை மறந்து, மெல்லெழுத்து இயற்கை (எழுத்-145) என்னும் நூற்பா விளக்கத்தில், “ஈரெழுத்து ஒருமொழிக்கண், மெய்ஞ்ஞானம் நூல் மறந்தார் எனவரும்” என்று மாறு படக் கூறுகின்றார். மெய் நூல் ஆகிய சொற்களை ஈரெழுத்துச் சொற்களாகவே கொண்டு உதாரணம் காட்டுகின்றார். குற்றியலுகரம் ஒலிக்கின்ற முறையைக் கூறுகின்ற, அல்லது கிளப்பினும் வேற்றுமைக் கண்ணும் எல்லா இறுதியும் உகரம் நிறையும் (எழுத்-408) |