பக்கம் எண் :

287ஆய்வு

என்னும் நூற்பாவில், ‘உகரம் நிறையும்’ என்ற பாடத்தை மாற்றி இவர்,
‘உகரம் நிலையும்’ என்று வேறு பாடம் கொண்டுள்ளார். தாம் கொண்ட
பாடமே சரியானது என்றும் விளக்குகின்றார். ஆனால் செய்யுளில் உரையில்
சீர்கள் நிற்கும் நிலையைப் பற்றிக் கூறும் போது ‘உகரம் நிறையும்’ என்ற
பாடத்தையே கொண்டுள்ளார்.

     கிளவியாக்கத்தில் (57), காலம் உலகம் என்ற நூற்பாவின் விளக்கத்தில்
சேனாவரையர் ‘உலகம் என்பது வடசொல்’ என்று கூறியுள்ளதை இவர்
உடன்படாமல்,

     “காலம் உலகம் என்பன வடசொல் அன்று, ஆசிரியர்
வடசொற்களை எடுத்தோதி இலக்கணம்
கூறார் ஆதலின்”

என்று கூறி மறுக்கிறார். ஆனால்,

          பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர்
         ஐயர் யாத்தனர் கரணம் என்ப

(கற்-4)

என்னும் நூற்பாவிற்கு விளக்கம் கூறும் போது,

         ஈண்டு என்ப என்றது, முதல் நூல்
         ஆசிரியரை அன்று வடநூலோரைக் கருதியது

என்று உரைக்கின்றார்.

     இத்தகைய இடங்களில் நச்சினார்க்கினியர், பிறரைச் சிக்க
வைப்பதற்காக விரித்த வலையில் தாமே சிக்கிக் கொண்டு இடர்ப்படுகின்றார்.

அடி சறுக்கிய யானை

    இவர் உரையில் சில இடங்களில் முன்னுக்குப் பின் முரண்பாடான
கருத்துக்கள் உள்ளன.

     களவியலில் (1), ‘கந்தருவர்க்குக் கற்பின்றி அமையவும் பெறும். ஈண்டுக்
கற்பின்றிக் களவே அமையாது என்றற்கு, துறையமை என்றார்’ என்று கூறிய
இவர் புறத்திணையியலில் (2), ‘களவு நிகழ்கின்ற குறிஞ்சிப் பொருளாகிய
கந்தருவமணம் வேத விதியாலே இல்லறம் ஆனாற் போல’ என்று
கூறுகின்றார். கந்தருவமும் களவும் ஒன்றே என்று வேறுபாடு எதுவும்
இல்லாதது போல் எழுதிவிடுகின்றார்.

     தொல்காப்பியர் குறிப்பிடும் அதோளி இதோளி என்னும் சொற்கள்,
சங்க காலத்தில் வழக்கிழந்து விட்டன என்னும் கருத்தினராய்ச் செய்யுளியலில்
(80),