அதோளி இதோளி உதோளி குயின் என்றாற் போல்வன இடைச்சங்கத்திற்கு ஆகா ஆயின என்று கூறுகின்றார். ஆனால் இவ்வாறு தாம் கூறி இருப்பதை மறந்து கலித்தொகை 117 - ஆம் பாடலின் உரையில், அப்பாடலில் உள்ள ஈதோளி என்னும் சொல்லின் வடிவத்தை ஆராயும் போது, ‘இதோளி-ஈதோளி எனச் சுட்டு நீண்டு நின்றது’ என்று விளக்குகின்றார். இவர் தம் காலத்தில் நிலவி வந்த பிற்போக்கான சமூகக் கட்டுப்பாடுகளை உரையில் புகுத்திவிட்ட இடமும் உள்ளது. உண்ணும்போது பிறர் பார்க்கக்கூடாது; அந்த நேரத்தில் மற்றவர் வீட்டினுள்ளே வரக்கூடாது என்னும் பிற்காலச் சமுதாய வழக்கத்தைக் களவியல் (15) உரைப்பகுதியில் கூறுகின்றார். புகாஅக் காலைப் புக்குஎதிர்ப் பட்டும் பகாஅ விருந்தின் பகுதிக் கண்ணும் என்பதற்கு, “உண்டிக் காலத்துத் தலைவி இல்லத்துத் தலைவன் புக்கு” என்று எழுதியபின், “சுடர்த்தொடீஇ கேளாய்” என்னும் கலிப்பாடலை மேற்கோள் காட்டுகின்றார். அந்தப் பாடல் இவர் கருத்திற்கு அரண் செய்யவில்லை. அதில், மேலோர் நாள் அன்னையும் யானும் இருந்தேமா, இல்லிரே உண்ணுநீர் வேட்டேன் என வந்தாற்கு என்னும் பகுதியில் உண்டிக்காலம் என்ற குறிப்பு இல்லை. இவரே களவியலில் (40) “மனையகம் புகாஅக் காலை” என்பதற்கு, உள் மனையிற் சென்று கூடுதற்கு உரித்து அல்லாத முற்காலத்து உண்டான இரவுக்குறி என்று எழுதுகின்றார். இக் கருத்து, முன் கூறியதற்கு மாறாக உள்ளது. இங்கே கூறிய கருத்தே பொருத்தமாய் உள்ளது. இத்தகைய இடங்கள், “ஆனைக்கும் அடிசறுக்கும்;ஆராய்ச்சியாளர்க்கும் நினைவு தடுமாறும்!” என்பதைச் சொல்லாமல் சொல்லுகின்றன! மறதியா ? புறக்கணிப்பா ? தொல்காப்பியத்திற்குப் பின், காலந்தோறும் தோன்றி வளர்ந்துள்ள சொல்வடிவம் இலக்கியக்கொள்கை இலக்கணக் கருத்து ஆகியவற்றைத் தம் உரையில் ஆங்காங்கே விளக்கிக் கூறுகின்ற |