பக்கம் எண் :

289ஆய்வு

இயல்புடையவர் நச்சினார்க்கினியர். ஆனால் சில இடங்களில், பிற்கால
இலக்கண இலக்கிய வழக்குகளைச் சிறிதும் நினைவுபடுத்தாமலும்
குறிப்பிடாமலும் உரை எழுதிச் செல்கின்றார்.

     களவியலில் (3) ‘சிறந்துழி ஐயம்’ என்னும் நூற்பா உரையில்,
தலைவியைக் காணும் தலைவனுக்கே ஐயம் நிகழும் என்றும்; தலைவனைக்
காணும் தலைவிக்கு ஐயம் நிகழாது என்றும் கூறுகின்றார். இதற்குக் காரணம்
கூறும்போது, “தலைவிக்கு, முருகனோ இயக்கனோ மகனோ என ஐயம்
நிகழின் அதனை நீக்கி உணர்தற்குக் கருவி இலள் ஆகலானும் இங்ஙனம் 
கூறினார். தலைவிக்கு ஐயம் நிகழின் அச்சமேயன்றி, காமக்குறி்ப்பு நிகழாதாம்”
என்று உரைக்கின்றார்.

     ஆனால் இவரது கருத்திற்கு மாறாக இலக்கண இலக்கிய வழக்குகள்
உள்ளன. அவை இவர்க்கு முற்பட்டவை. எனினும் அவற்றை
நினைவுபடுத்தவில்லை!

     1. இறையனார் களவியலுரை,

     “இவளும் இவனை ஐயப்படும். ‘கடம்பக் கடவுள்
கொல்லோ! இயக்கன் கொல்லோ! அன்றி மக்களுள்ளான்
கொல்லோ!” என்று இங்ஙனம் ஐயப்படும்”

என்று தலைவனைக் காணும் தலைவிக்கும் ஐயம் நிகழும் என்று கூறுகின்றது.

     2. சீவக சிந்தாமணியில், பதுமை சீவகனை நோக்கிய போது,

          வணங்கு நோன்சிலை வார்கணைக் காமனோ !
         மணங்கொள் பூமிசை மைவரை மைந்தனோ !

(சிந் - 1311)

என்று ஐயுற்றதாய்த் திருத்தக்க தேவர் பாடுகின்றார்.

     3. பெரிய புராணத்தில் சுந்தரரைக் கண்ட பரவை யார்,

          முன்னே வந்து எதிர் தோன்றும்
             முருகனோ ! பெரு கொளியால்
         தன்னேரில் மாரனோ !
             தார்மார்பின் விஞ்சையனோ
         மின்னேர்செஞ் சடையண்ணல்
             மெய்யருள்பெற் றுடையவனோ !
         என்னே ! என் மனம் திரித்த
             இவன்யாரோ ! என நினைந்தார்

(தடுத் - 144)

என்று ஐயுற்றதாய்ச் சேக்கிழார் பாடுகின்றார்.