4. கம்பராமாயணத்தில், இராமனைக் கண்ட சீதைக்கு ஐயம் ஏற்பட்டதையும், பின் ஐயம் நீங்கித் தெளிந்ததையும் கம்பர் பின்வருமாறு பாடுகின்றார்: நெருக்கியுட் புகுந்தரு நிறையும் பெண்மையும் உருக்கி,என் உயிரொடும் உண்டு போனவன் பொருப்புறழ் தோற்புணர் புண்ணி யத்தனு, கருப்புவில் அன்று;அவன் காமன் அல்லனே ! (மிதிலை - 54) உரைசெயின் தேவர்தம் உலகுளா னவன் விரைசெறி தாமரை இமைக்கும் மெய்ம்மையான் வரிசிலைத் தடக்கையன், மார்பின் நூலினன், அரசிளங் குமரனே ஆகல் வேண்டுமால். (மிதிலை - 58) மேலே காட்டியுள்ள இலக்கண இலக்கியங்கள் நச்சினார்க்கினியர்க்கு முற்பட்டவை; செல்வாக்குடன் இலக்கிய உலகில் நிலவி வந்தவை. சிந்தாமணிக்கு இவரே உரை கண்டு்ள்ளார். ஆதலின் இத்தகைய இடங்களை இவர் மறந்துவிட்டார் என்பதா? புறக் கணிக்கி்ன்றார் என்பதா? பிற்கால இலக்கிய வழக்கை மறந்தோ புறக்கணித்தோ இவர் உரை எழுதுகின்ற இடம், மற்றொன்றும் உள்ளது. சொல்லதிகாரத்தில் (452), கடிசொல் இல்லைக் காலத்துப் படினே என்றும் நூற்பா விளக்கத்தில், “புதியன தோன்றினாற் போல, பழையன கெடுவனவும் உள. அவை அழன் புழன் முதலியனவும், எழுத்திற் புணர்ந்த சொற்கள் இக் காலத்து வழங்காதனவும் ஆம்” என்று எழுதுகின்றார். ஆனால், மணிமேகலையில் அழன் புழன் என்ற சொற்கள் வழங்கியுள்ளன. ஆராய்ச்சி அறிஞர் மு. இராகவ ஐயங்கார் ஆராய்ச்சித் தொகுதியில் (பக் - 107), “மணிமேகலைச் சக்கரவாளக் கோட்ட முரைத்த காதையில் (92), அழற்பெய் குழிசியும் புழற்பெய் மண்டையும் என வரும் தொடர், அழன் புழன் என்ற வழக்குகளைக் குறிப்பது போலும்” என்று குறிப்பிடுகின்றார். |