பக்கம் எண் :

291ஆய்வு

     மேலே காட்டியுள்ள அடிக்குப் பொருள் கொள்வதில் சிக்கல் உள்ளது.
நச்சினார்க்கினியர் எழுத்ததிகார உரையில் (எழுத்.354), அழன் என்பதற்குப்
பிணம் என்று பொருள் கூறுகின்றார். ஆனால் இவர் புழன் என்பதை
விளக்கவில்லை.

     மணிமேகலைக்கு உரை எழுதிய ந.மு. வேங்கடசாமி நாட்டார், அழல்
புழல் என்று கொண்டு, மேலே காட்டிய அடிக்கு,

         “தீப்பெய்த பானையும் புழல் என்னும் பண்ணியம் இட்ட கலனும்”

என்று பொருள் கூறியுள்ளார்.

     மணிமேகலையில் இது மேலும் ஆராய வேண்டிய இடமாகும்.

4. பத்துப் பாட்டு உரை 

     பத்துப்பாட்டிற்கு நச்சினார்க்கினியர் உரை எழுதவில்லை என்றால்,
பல பாடல்களின் சிறப்பான பகுதிகள், பொருள் தெளிவின்றி இருந்திருக்கும்.
இருளில் இருக்கும் வண்ண ஓவியமாய்ப் பார்த்துக் களிப்பாரின்றிப்
போய்இருக்கும். பழந்தமிழ் இலக்கியங்களை மரபறிந்து, பொருள் தெளிவுடன்
சுவையாக எடுத்து விளக்கிய பெருமை, நச்சினார்க்கினியர்க்கு உண்டு.

          ஆன்றோர் புகழ்ந்த அறிவினில் தெரிந்து
         சான்றோர் உரைத்த தண்டமிழ்த் தெரியல்
         ஒருபது பாட்டும் உணர்பவர்க்கு எல்லாம்
         உரையற முழுதும் புரைபட உரைத்தும்

என்று சிறப்பாயிரம் இவரைப் பாராட்டுகின்றது.

     பத்துப்பாட்டை இவர் பலநோக்குடன் கண்டு தெளிந்து உரை
எழுதுகின்றார். பாடல்களின் தலைப்பை ஆராய்ந்து அவற்றின் கருத்தை
எண்ணி வியக்கின்றார். பாடலின் பொருள் முடியும்தோறும் நிறுத்தி, வினை
முடிபுகளை இயைத்துக் காட்டுகின்றார். விளக்கவேண்டிய பகுதிகளை நயமாக
விளக்குகின்றார். இடையிடையே தொல்காப்பிய இலக்கணத்தைப்
பொருத்திக்காட்டித் தமிழ்மரபை நினைவூட்டுகின்றார். சொற்களுக்குப்
பொருள் எழுதுகின்றார். சங்ககால மக்களின் பழக்கவழக்கம், நாகரிகம்,
வரலாறு ஆகியவற்றை நினைவில் கொண்டு, வேண்டிய இடங்களில் தெளிவு
பெறச் செய்கின்றார்.