பெயர் விளக்கம் பத்துப்பாட்டின் பெயர்கள் யாவும் கலையழகு வாய்ந்தவை; பொருளாழம் மிக்கவை. தலைப்புகளை எண்ணிப் பார்த்து அத்தகைய சிறந்த தலைப்புகளைப் பாடலுக்கு இட்ட புலவர் பெரு மக்களின் கற்பனைத்திறனை வியக்கலாம். நச்சினார்க்கினியர் இப் பணியைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி இருக்கிறார். ‘நெடுநல்வாடை’ என்ற இனிய தலைப்பு, ஏழாம் பாடலுக்கு உரியதாக விளங்குகின்றது. வாடை என்றும், நெடுவாடை என்றும், நெடுநல் வாடை என்றும் பெயர் சூட்டிய நக்கீரரின் கற்பனைத்திறன் மிக உயர்ந்தது. நச்சினார்க்கினியர் புலமைக்கு இத் தலைப்பு இனிய விருந்தாய் அமைகின்றது. ‘நெடியதாகிய நல்ல வாடை’ என்று பொருள்கூறி, மேலும் அதில் நயங் காண்கின்றார். ‘தலைவனைப் பிரிந்திருந்து வருந்தும் தலைவிக்கு. ஒரு பொழுது ஓர் ஊழிபோல நெடிது ஆகிய வாடையாய்’-நெடுவாடையாய் உள்ளது. “அகத்து ஒடுங்கிப் போகம் நுகர்வார்க்குச் சிறந்த காலமாயினும் அரசன் போகம் வேண்டிப் பொதுச் சொற் பொறானாய், அப் போகத்தில் மனமற்று வேற்றுப்புலத்துப் போந்து இருக்கின்ற இருப்பு ஆதலின், அவற்கு நல்லதாகிய வாடை ஆயிற்று.” இவ்வாறு நச்சினார்க்கினியர் பாட்டின் தலைப்பிற்கு நயம் கூறுகின்றார். பட்டினப்பாலை என்பதைப் பின்வருமாறு விளக்குகின்றார்: “இது பட்டினத்தைச் சிறப்பித்துக் கூறிய பாலைத் திணையாகலின், இதற்குப் பட்டினப்பாலை என்று பெயர் கூறினார்.” மலைபடுகடாம் என்ற தொடர், நச்சினார்க்கினியரால் சிறந்த விளக்கம் பெற்று, புதிய ஒளி பெறுகின்றது: ‘மலைபடுகடாஅம் மாதிரத்து இயம்ப” (348) என்ற அடிக்கு, ‘மலைகளாகிய யானைக்கு உண்டாகின்ற ஒலி, திசைகள் எல்லாம் ஒலிப்ப’ என்று பொருள் எழுதி, ‘கடாம், ஆகுபெயராய் அதனாற் பிறந்த ஓசையை உணர்த்திற்று’ என்று விளக்கமும் தருகின்றார். பின்னர், “மலைக்கு யானையை உவமித்து அதன்கண் பிறந்த ஓசையைக் கடாம் எனச் சிறப்பித்ததனால், இப்பாட்டிற்கு ‘மலைபடுகடாம்’ என்று பெயர் கூறினார்” என்று நயம்பட உரைக்கின்றார். மாட்டு பத்துப்பாட்டில் இவர் ‘மாட்டு’ என்ற இலக்கணத்தின் பெயரால், பாடல்களைச் சிதைத்தும், உருக்குலைத்தும் பொருள் |