பொருநராற்றுப்படை 159. ஏடு இல் தாமரை: (பொற்றாமரை) ஒருவன் செய்ததன்றி, தமக்கென இதழ் இல்லாத தாமரை. 176. நில்லாத உலகம்-செல்வமும் யாக்கையும் முதலியன நிலை நில்லாத உலகம். சிறுபாணாற்றுப்படை 139. மடவோர்-வறுமை உறுதலும் இயல்பு என்று அறியாது புறங்கூறுவோர். 140. அழி பசி-அறிவு முதலியன அழிதற்குக் காரணமான பசி. பெரும்பாணாற்றுப்படை 22. புலவுவாய்-கற்ற கல்வியை வெறுத்துக் கூறும் வாய். 418. அடங்காத் தானை-ஓர் எண்ணின்கண் அடங்காத பகைவர். 481. ஆன்று அடங்கு அறிஞர்-கல்விகள் எல்லாம் நிறைந்து களிப்பின்றி அடங்கின அறிவினையுடையார். குறிஞ்சிப் பாட்டு 225. வளைமையின் தன் தலை தீர்ந்தன்றும் இலனே-நற்குணங்களைத் திரித்தற்கு உரிய செல்வச் செருக்கான், எந்நாளும் தன் குலத்திற்கு உரிய நற்குணங்களின் நீங்கியதும் இலன். மலைபடுகடாம் 40. பைதீர் பாணர்-பசுமையற்ற பாணர்; என்றது கல்வி முதிர்ந்தமையின் இளமையற்ற பாணர் என்றவாறு. 398. சுட்டினும் பனிக்கும் சுரம்-தத்தம் ஊர்களிலே இருந்து நினைப்பினும் தலை நடுங்குவிக்கும் சுரம். 445. உண்ணுநர்த் தடுத்த இடிநுண் நுவணை-தன்னை நுகர்வாரை வேறொன்றை நுகராமல் தடுத்த இடித்தலால் நுண்ணிதாகிய தினைப் பிண்டி. சொல்லும் பொருளும் காடு கிழாள் என்பது, இக்காலத்து ‘காடு காள்’ என்று மருவிற்று (முருகு.259). கல்லா இளையர்-தம் தொழிலை ஒழிய வேறு கல்லாத இளையர் (சிறுபாண்-33). வாடுஊன்-உப்புக்கண்டம் (பெரும்பாண்-100). |