பக்கம் எண் :

299ஆய்வு

          கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டுஅதற்கு
         உள்ளுறை உவமமும், ஏனை உவமமும்,
         தெள்ளிதின் தெரிந்து திணைப்பொருட்கு ஏற்ப
         உள்ளுறை உவமத்து ஒளித்த பொருளைக்
         கொள்பவர் கொள்ளக் குறிப்பறிந்து உணர்த்தி;
         இறைச்சிப் பொருளுக்கு எய்தும் வகையைத்
         திறப்படத் தெரிந்து சீர்பெறக் கொளீஇ,
         துறைப்படு பொருளொடு சொற்பொருள் விளக்கி;
         முறைப்பட வினையை முடித்துக் காட்டி;
         பாட்டிடை மெய்ப்பாடு பாங்குறத் தெரித்து;
         பாற்பட நூலின் யாப்புற உரைத்த
         நாற்பெயர் பெயரா நடப்பக் கிடத்திப்
         போற்ற இன்னுரை பொருள்பெற விரும்பியும்

என்று நச்சினார்க்கினியரின் உரைநலம்  நன்கு ஆராய்ந்து கூறப்பட்டுள்ளது.

     செய்யுளியல், உரையில், “நூற்றைம்பது கலியுள்ளும் ஒத்தாழிசைக் கலி
அறுபத்துஎட்டு வந்தது” (செய்-130) என்றும், “நூற்றைம்பது கலியுள்
கலிவெண்பாட்டு எட்டு” (செய்-153) என்றும் கலித்தொகைப் பாடல்களின்
இனத்தைக் கணக்கிட்டுக் கூறுகின்றார்.

     கலித்தொகைப் பாடல்களை இயற்றிய புலவர்களைப் பற்றி ஆராய்ச்சி
உலகம் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டுள்ளது. நச்சினார்க்கினியர் உரை,
ஆராய்ச்சி உலகிற்கு ஒளிதந்து உதவுகின்றது. தோற்றுவாயில், “ஈண்டுப்
பாலைத்திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார்
என்று கூறுக” என்றும், நூலின் இறுதியில், “பாலை குறிஞ்சி மருதம்
முல்லை நெய்தல் என இம்முறையே கோத்தார் நல்லந்துவனார்” என்றும்
கூறுகின்றார். ‘கோத்தல்’ என்ற சொல்லை, நச்சினார்க்கினியர், (பிறர் செய்த
செய்யுளைத்) தொகுத்தல் என்னும் பொருளில் ஆண்டுள்ளார். “இவர்
(பெருங்கௌசிகனார்) செய்த செய்யுளை (மலைபடுகடாம்) நல்லிசைப் புலவர்
செய்த ஏனைச் செய்யுட்களுடன் சங்கத்தார் கோவாமல் நீக்குவர்; அங்ஙனம்
நீக்காது கோத்தற்குக் காரணம் “(மலைபடு-145) என்ற இடத்தில் கோத்தல்
என்ற சொல்லைத் தொகுத்தல் என்ற பொருளிலேயே ஆண்டுள்ளார்.
ஆதலின் கலித்தொகையைத் தொகைநூல் என்றும், நல்லந்துவனாரே
அதனைத் தொகுத்தவர் என்றும் கருதுகின்றார் என்பது தெரிகின்றது.