நெய்தற்கலியை இயற்றியவர் நல்லந்துவனார் என்பது நச்சினார்க்கினியர் (25) “தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுள்செய்தார்” என்று கூறுவதால் உணரலாம். ஆனால், ஏனைய பகுதிகளில் அவற்றை இயற்றிய ஆசிரியர் பெயர் எதுவும் எங்கும் குறிப்பிடவில்லை. இதனை ஆராய்ச்சி உலகம் நினைவில்கொண்டு உண்மை காணமுயல வேண்டும். துறை விளக்கம் அகத்திணைத் துறைகளையும் கூற்றுகளையும் மிக விரிவாகத் தொல்காப்பியத்தின் துணைகொண்டு ஆராய்கின்றார். நெய்தற்கலியில் ‘புரிவுண்ட புணர்ச்சியுள்’ (25) என்னும் பாடலின் துறைபற்றிய விளக்கம் மிக விரிவானது. இவ்வாறே குறிஞ்சிக்கலியில் முதற்பாட்டும் இறுதிப்பாட்டும், இவர் விளக்கத்தால் அவற்றிற்குரிய துறைகள் சிறந்த விளக்கம் பெறுகின்றன. நாடக நோக்கு கலித்தொகைப் பாடல்கள் நாடகப்போக்கில் அமைந்துள்ளன. ஒவ்வொரு பாடலும் ஓரங்க நாடகமாய் உள்ளது. தொடங்கி வளர்ந்து சிக்கல் அடைந்து, முடியும் நாடகத்தின் பல்வேறு இயல்புகள், கலிப்பாடல்களில் உண்டு. கதை நிகழ்ச்சி இடம் உரையாடல் நாடக உறுப்பினரின் பல்வேறுவகையான பண்பு ஆகியவற்றை அவற்றில் காணலாம். முல்லைக் கலியிலும், குறிஞ்சிக் கலியிலும் பல சிறந்த ஓரங்க நாடகங்கள் இடம் பெற்றுள்ளன. நச்சினார்க்கினியர் சிறந்த நாடக ஆசிரியரைப் போல அப் பாடல்களின் அமைப்பை நுணுகி ஆராய்ந்து நாடகப் போக்கில் அரிய உரை எழுதுகின்றார். இவரது நாடக நோக்கு நமக்கு வியப்பளிக்கின்றது. உவமை விளக்கம் உவமையின் சிறப்பை ஆராய்ந்து பொருளோடு பொருத்திக் காட்டுவதில் இவர் வல்லவர். உதாரணத்திற்கு ஓர் உவமை விளக்கத்தைக் காண்போம். ... இன நாரை, முக்கோல்கொள் அந்தணர் முதுமொழி நினைவார்போல் எக்கர்மேல் இறை கொள்ளும் (கலி-126) உரை: “அந்தணர்-காசாயம் போர்த்த குழாங்கள்”. (முதுமொழி - பிரணவம்.) |