“பெரிய நாரை சிறகு சிவந்திருத்தலானும் மூக்குத் தரையிலே சென்று குத்தலானும் அதனை முக்கோலை ஊன்றி இருந்த அந்தணரொடு ஒப்புரைத்தார்.” உரைநயம் பல நயமான பகுதிகள் உரைமுழுதும் உள்ளன. கீழே சிலவற்றைக் காண்போம். 1. கொடுங் கொட்டி: கொடு கொட்டி என விகாரமாயிற்று. கொடுங் கொட்டி என்றார், (சிவபெருமான்) எல்லாவற்றையும் அழித்து நின்று ஆடுதலின். 8. முக்கோல் (அந்தணர்); அரி அயன் அரன் என்னும் மூவரும் ஒருவர் என்று சொல்லுதல் தன்னிடத்தே அமைந்த கோல்; காணேம் அல்லேம் கண்டனம் என்றதனால் அங்ஙனம் போகின்றவரை அறிந்து விலக்கல் அறம் அன்று என்று போந்தேம் ஆகக் கொள்க. 37. உண்கண்; மை யுண் கண். 40. உலக்கை வயின் வயின் ஓச்சி: உலக்கையை என்னிடத்தும் நின்னிடத்தும் உயர்த்தி. 50. நல் கூர்ந்தார் செல்வமகள்: பிள்ளையான் மிடிப் பட்டாருடைய செல்வத்தை உடைய மகள். 108. ‘கட்குத்திக் கள்வன்’ என்றது விழித்திருக்க மிண்டையைக் கொள்வான் என்னும் பழமொழி. 115. குடம் சுட்டும் நல்லினம்-இன்னதனைக் குடம் பால் போதும் என்று கருதப்படும் பசு இனம். 129. “தொல்லூழி தடுமாறி, தொகல்வேண்டும் பருவத்தால் பல்வயின் உயிரெல்லாம் படைத்தான்கண் பெயர்ப்பான் போல்’, “பல உலகங்களில் உயிர்கள் எல்லாம் பழையதாகிய ஊழிக்காலத்தே பிறந்து இறந்து திரியும்படி, அயனாய்நின்று படைத்த முதல்வன் அரனாய் அவ்வுயிர் எல்லாம் தன்னிடத்தே வந்து தொகுதலைத் தான் விரும்பும் ஊழி முடிந்த காலத்திலே தன்னிடத்தே மீட்டு ஒடுக்கிக் கொள்கின்றவனைப்போல” 133. பொறை எனப்படுவது போற்றாரைப் பொறுத்தல் - “பொறை என்று சொல்லப்படுவது, பகைவரைக் காலம் வரும் அளவும் பொறுத்திருத்தலை”. சொல்லும் பொருளும் சிறைப் படுத்தியது என்ற பொருளில், ‘சிறைத்தது’ என்ற சொல்லை ஆளுகின்றார் (82). சில அரிய சொற்களுக்கு ஆங்காங்கே பொருளும் எழுதியுள்ளார்: |