33. ஈர் - ஈர்க்குமரம். 75. அஞ்சி அச்சுறுத்தலும் என்றாற்போல ‘அச்சு’ என விகாரமாய் நின்றது. 84. பரத்தைமை, பரத்தை என நின்றது; ‘தன் வயின் உரிமையும் அவன் வயிற் பரத்தையும்’ என்றார் ஆசிரியர் ஆகலின். 91. கண்ணி - தலைமாலை. 94. ‘நடுவுயர்ந்து’ என்றது, நோன்புயர்ந்தது என்றாற் போல நின்றது. 6. பல்கலைப் புலமை நச்சினார்க்கினியர், நூலறிவோடு நுண்ணறிவு உடையவர். பலவேறு கலைகளைக் கற்றுத் துறைபோகிய வித்தகர். பாட்டிற்குச் சொற்பொருள் கண்டு உரை எழுதுவதோடு இவர் நிற்கவில்லை. நூலில் இடம்பெறும் சமயக் கருத்து இசை நாடகம் முதலிய கலைகளைப் பற்றிய அறிவு, ஆடை அணிபற்றிய நுண்ணிய விளக்கம், உலகிலுள்ள பலஇனத்து மக்களின் பழக்க வழக்கம் பண்பாடு ஆகியவற்றை அறிந்தவர். வடமொழியும் நன்கு பயின்றவர், தமிழில் உள்ள இலக்கணம், இலக்கியம், நிகண்டு, காவியம், புராணம் ஆகியவற்றை நன்கு கற்றவர். சோதிடம், மருத்துவம் பற்றியும் கட்டடக்கலை பற்றியும் போதிய அறிவு இவரிடம் உண்டு. பயிர்வகையும் உயிர்வகையும் நன்கு அறிந்துள்ளார். இவர் அறிந்துள்ள பலவேறு கலைத்துறைகளை விரிவாகக் காண்போம். இலக்கியப் புலமை நச்சினார்க்கினியர் தாம் உரை எழுத மேற்கொண்ட இலக்கியங்களைப் பலமுறை நுணுகிக் கற்றுப்புலமை பெற்றவர். எண்பதுக்கு மேற்பட்ட நூல்களிலிருந்து பல எடுத்துக்காட்டுகளை இவர் தந்துள்ளார். இவற்றோடு இலக்கணம், நிகண்டு முதலியவற்றிலும் இவர் சிறந்த பயிற்சி யுள்ளவர். வடமொழியிலுள்ள பலவகை நூல்களை அறிந்தவர். திருமுருகாற்றுப்படை உரையில் (63, 102) திருவாசகப் பாடல்கள் இரண்டினை மேற்கோள் காட்டியுள்ளார். செய்யுளியல் உரையில் திருவாய்மொழி முதலியவற்றைக் குறிப்பிடுகின்றார். |