பெரியோர் மேஎய்-சீவன் முத்தராய் இருப்பர் இடத்தே சிலகாலம் பொருந்தி நின்று (மதுரை-473). நின் என்றது சீவான்மாவை: நின் அவலம் கெடுக - நின்னிடத்து உண்டாகிய மாயை இனிக் கெடுவதாக (207-8). இத்தகைய இடங்களில், நச்சினார்க்கினியர் தம் சமயக் கொள்கையை வெளிப்படுத்தியுள்ளார். நிலநூல் அறிவு சங்க இலக்கியங்களில் கூறப்படும் ஊரும், நாடும், ஆறும், மலையும் பலவாகும். அவை இன்று எங்கெங்கே உள்ளன என்று அறிந்து கொள்வது சங்க இலக்கியப் பயிற்சிக்குப் பெரிதும் துணை செய்யும். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இடங்களின் பெயரை நாம் இன்று அறிந்து இன்புறத் துணை செய்கின்றார் நச்சினார்க்கினியர். பட்டினப்பாலை குறிப்பிடும் ‘காழகம்’ என்பதனை (பட்-19) கடாரம் என்றும்; திருமுருகாற்றுப்படையில் வரும் ‘ஏரகம்’ என்பதனை (முருகு-189) மலைநாட்டகத்து ஒரு திருப்பதி என்றும்; சிறுபாணாற்றுப்படை குறிக்கும் ‘மதிலொடு பெயரிய பட்டினம்’ என்பதனை (சிறுபாண்-153) எயிற்பட்டினம் என்றும் அறிந்து எழுதுவது போற்றத்தக்கதாகும். மலைபடுகடாம் குறிப்பிடும் ‘சேயாறு’ என்பதனைச் “சேயாறு - அவ்வியாற்றின் பெயர்” (மலைபடு-476) என்று கூறித் தம் நில நூல் அறிவைப் புலப்படுத்துகின்றார். கலைகள் இசை, நாடகம் முதலிய கலைகளைப்பற்றி ஆராய்ந்துள்ளார். “பாட்டு காமத்தை விளைவித்தலின், யாழை வாசித்து” என்று இவர் கூறுவது கருதத் தக்கது (மதுரை-558). பத்துப்பாட்டில் வரும் யாழ் என்னும் பண்டை இசைக் கருவியின் நுட்பங்களை எல்லாம் இவர் நன்கு தெரிந்து விளக்குகின்றார். இவரது விளக்கம் இன்றேல் நாம் யாழ்க்கருவி பற்றிய பல செய்திகளை அறிந்திருக்க முடியாது. யாழின்தோற்றம், உறுப்பிகளின் அமைப்பு, அளவு ஆகியவற்றோடு அவை செய்தற்குரிய மரங்களையும் இவர் கூறுகின்றார். (பொருந-22). இசைகளின் பெயர்களையும் குறிப்பிடுகின்றார். துணங்கை முதலிய கூத்து வகைகளை இவர் நன்கு விளக்குகின்றார். திருமுருகாற்றுப்படை உரையில், (56) பழுப்புடை இருகை முயக்கி அடிக்க, துடங்கிய நடையது துணங்கை யாகும் என்று துணங்கைக் கூத்தை விளக்குகின்றார். |