பக்கம் எண் :

305ஆய்வு

     ஆடுமகளிராகிய விறலியரை ‘விறல்பட (மெய்ப்பாடு தோன்ற)
ஆடுதலையுடையார்’ என்று விளக்கி அறிமுகப் படுத்துகின்றார் (மதுரை-218).

     பாணர், கூத்தர் ஆகிய கலைஞர்களைப் பற்றி இவர் பின்வருமாறு
கூறுகின்றார்:

     “பாணரும், இசைப்பாணரும் யாழ்ப்பாணரும், மண்டைப்பாணரும்
எனப் பலராம். பொருநரும் ஏர்க்களம் பாடுநரும் போர்க்களம் பாடுநரும்
பரணி பாடுநரும் எனப் பலராம்” (புறத்-36).

     “கூத்தர்-நாடக சாலையர். தொன்றுபட்ட நன்றும் தீதும் கற்றறிந்தவற்றை
அவைக்கு எல்லாம் அறியக் காட்டுதற்கு உரியர்” (கற்-27)

     “ஆடல் தொழிற்கு உரியோரும் பாரதி விருத்தியும் விலக்கியற் கூத்தும்
கானக் கூத்தும் கழாய்க் கூத்தும் ஆடுபவர்” (புறத்-36).

     நாடகத்திற்கு இவர் தரும் விளக்கம் மிகவும் சிறப்பு வாய்ந்தது.
அகத்திணையியலில் (3) “யாதானும் ஒரோவழி ஒருசாரர்மாட்டு உலகியலான்
நிகழும் ஒழுக்கத்தினை எல்லார்க்கும் பொதுவாக்கி இடமும் காலமும்
நியமித்துச் செய்யுள் செய்தல்” என்பது இவர் தரும் விளக்கம்.

     சங்க காலத்தில் மகளிர் அணிந்த பலவகை அணிகளை
நச்சினார்க்கினியர் நன்கு அறிந்து விளக்குகின்றார். அணிகளைப் பற்றி இவர்
தரும் விளக்கங்களைப் பத்துப்பாட்டிலும் (முருகு-16, 84) மருதக் கலியினும்
(20) கண்டு மகிழலாம். தமிழர் நாகரிகத்தை அறிய விரும்புவர்க்கு இவரது
விளக்கம் பெரிதும் உதவும்.

     வீட்டின் பல்வேறு பகுதிகளை ‘மண்டபம் கூடம் தாயக்கட்டு
அடுக்களை’ என்று விளக்குகின்றார். (மதுரை-358).

     சமையல் கலையிலும் இவரது நாட்டம் சென்றுள்ளது. ‘தீம்புளி’
என்பதனைக் கருப்புக் கட்டி கூட்டிப் பொரித்த புளி’ என்று (மதுரை-318)
விளக்குகின்றார். ஊறுகாயைச் சங்க நூல்கள் ‘காடி’ என்று குறிப்பிடுகின்றன.
நச்சினார்க்கினியர் “ஊறுகறி” என்றும், ‘புளியங்காய் நெல்லிக்காய் முதலியன
ஊறவிட்டு வைத்தவை’ என்றும் கூறுகின்றார். (பெரும்-310,57).

     மருத்துவம், சோதிடம் முதலியவற்றில் இவர்க்குப் புலமை உண்டு
என்பதை, நெடுநல் வாடை (72-5) பதுமையார் இலம்பகம் (1280-90)
ஆகியவற்றின் உரைகளால் அறியலாம்.