வாழ்வியல் உலகம் பலவகை என்பது பழமொழி. இந்த உலகில் எத்தனையோ வகையான மக்கள் வாழ்கின்றனர். அம் மக்களின் வாழ்க்கையில் எத்தனையோ பழக்கவழக்கங்கள், மேடு பள்ளங்கள் உள்ளன. நச்சினார்க்கினியர் அந்தண குலத்தில் பிறந்து, தம் குலத்துப் பழக்கவழக்கங்களைப் போற்றி வாழ்ந்தவர்; எனினும் அவர் தம் காலத்து மக்களின் வாழ்க்கையை நுணுகி ஆராய்ந்து பல செய்திகளைத் தெரிந்து கொண்டிருக்கின்றார். நிலம் உழுது பயிர்செய்யும் உழவர் பேச்சை, “ஒரு சால் இரு சால் என்றல் உழவுத் தொழிற்கு மரபு” (பெரும்-197) என்று நச்சினார்க்கினியர் குறிப்பிடுகின்றார். பெரும்பாணாற்றுப்படையில், முற்காலத்தில் தமிழ் நாடெங்கும் நடமாடிய வண்டியின் தோற்றமும் அதன் பல்வேறு உறுப்புக்களும், தெளிவாக விளக்கப்பட்டுள்ளன (45-50). நச்சினார்க்கியர், வண்டியில் ஒவ்வொரு உறுப்பையும் நன்கு அறிந்து, அவற்றின் பெயர்களைப் பொருள் அறிந்து விளக்குகின்றார். குறிஞ்சி நிலத்தில் தினைப்புனம் காக்கும் வேட்டுவ மகளிர் கிளிகளை விரட்டத் தட்டை என்னும் ஒரு கருவியை வைத்திருந்தனர் என்று குறிஞ்சிப்பாட்டு குறிப்பிடுகின்றது (43). தட்டை என்பதை “மூங்கிலைக் கண்ணுக்குக் கண் உள்ளாக நறுக்கிப் பலவாகப் பிளந்து ஓசையுண்டாக ஒன்றிலே தட்டுவதோர் கருவி” என்று இவர் விளக்குகின்றார். முல்லை நிலத்தில் ஆடு மாடு மேய்க்கும் இடையர் தோற்றத்தைப் பெரும்பாணாற்றுப்படை ஓவியம் தீட்டியுள்ளது (169-175). நச்சினார்க்கினியர் இடையரின் உடை, பழக்கவழக்கம் ஆகியவற்றை உணர்ந்து இப் பகுதிக்கு உரை எழுதுகின்றார். மதுரைநகர்த் தெருவில், வெற்றிலைபாக்கு விற்போரை, தகைசெய் தீஞ்சேற்று இன்னீர்ப் பசுங்காய் நீடு கொடி இலையினர் (400, 401) என்று மதுரைக்காஞ்சி குறிப்பிடுகின்றது. நச்சினார்க்கினியர் “உடம்பிற்கு அழகைக் கொடுக்கும் இனிய கருங்காலி சீவிக் காய்ச்சின களிக்கலந்த இனிய நீரினையுடைய பசியபாக்கு” என்று பாக்கு வேகவைத்துப் பக்குவப்படுத்தும் முறையினை அறிந்து எழுதுகின்றார். |