யானைப்பாகர், “யானைப் பேச்சான வடமொழி கற்று, அப்புது அப்புது, ஆது ஆது, ஐ ஐ என்று கூறி யானையை ஓட்டுபவர்” என்று இவர் கூறுகின்றார் (முல்லை-36, சீவக-1834). அந்தணராகிய நச்சினார்க்கினியர், எளிய மக்கள் உண்ணும் புலால் முதலிய உணவு வகைகளையும் தெளிவாக அறிந்திருப்பது நமக்கு வியப்பைத் தருகின்றது. சிறுபாணாற்றுப்படை குறிப்பிடும் ‘அலவன் கலவை’ (195) என்பதனை, ஞெண்டும் பீர்க்கங்காயும் கலந்த கலப்பு’ என்று எழுதுகின்றார். பெரும்பாணாற்றுப்படை கூறும் ‘வாடு ஊன்’ என்பதற்கு (100) உப்புக்கண்டம் என்றும், மதுரைக் காஞ்சியில் வரும் (320). ‘கொழுமீன் குறைஇய துடிக்கண் துணியல்’ என்பதற்குக் ‘கருவாடு’ என்றும் பொருள் கூறுகின்றார். உயிரியல் விலங்கு, பறவை முதலிய உயிர்களைப் பற்றியும் நச்சினார்க்கினியர் அறிந்துள்ளார். அவ்வுயிர்களின் தோற்றம் பழக்கவழக்கம், உணவு, உறையுள் ஆகியவற்றையும் உரையில் கூறுகின்றார். முல்லைப்பாட்டு, யானைக்கு ‘இன்குளகு’ தந்ததாய்க் குறிப்பிடுகின்றது. (33) அதிமதுரத் தழை என்று இவர் யானைக்கு விருப்பமான தழையினைக் கூறிகின்றார். மருதக்கலிப் பாடலில் (31) குதிரைக்கு உரிய பலவகை அணிகள் கூறப்படுகின்றன. இவர் அவற்றின் வடிவம், அணிவிக்கும் முறை, அணிய வேண்டிய உறுப்பு ஆகியவற்றை நன்கு அறிந்து விளக்குகின்றார். (கலி.96, 7-21). மதுரைக்காஞ்சியுள் குதிரைக்கு ஐந்து கதியும் பதினெட்டுச் சாரியும் கற்பிக்கப்படும் என்கின்றார் (389). மக்கள் வளர்க்கும் பன்றியைப் பற்றிய குறிப்பு ஒன்று பெரும்பாணாற்றுப்படையில் வருகின்றது (339 344). ஊனுக்காக வளர்க்கப்படும் ஆண்பன்றி, பெண்பன்றிகளுடன் புணர்ச்சிக்குச் சேராது என்று அப் பாடல் குறிப்பிடுகின்றது. (ஆண்பன்றி பெண்பன்றியைப்) “புணரின் கொழுப்பு இன்றாம்” என்பது இவரது விளக்கம். அன்னப் பறவைகளில் கறுப்புநிற அன்னமும், வெள்ளை நிற அன்னமும் உண்டு என்று கூறுகின்றார் (சீவக 930; பெரும்: 317). அன்னப் பறவை தாவிப்பறக்கும் என்றும் அறிந்துள்ளார் (நெடுதல்-91.) |