பக்கம் எண் :

உரையாசிரியர்கள்308

     பாம்புகளின் இயல்பறிந்து இவர் எழுதும் இடங்கள் பல உள்ளன.
மலைப்பாம்பு பாந்தள் (குறிஞ்-259) எனப்படும். இதனை இவர், பெரும்பாம்பு
என்கின்றார். இரவில் பாம்பு இரை தேடும் போது, தன்னிடம் உள்ள
மாணிக்கத்தை உமிழும் என்று கூறுகின்றார். (குறிஞ்-221). பாம்புகள் பழைய
மரப் பொந்துகளில் வாழும் என்பதை இவர் அறிந்துள்ளார் (பெரும்-232).

     கடலில் வாழும் மீன்களில் ‘பனைமீன்’ என்பது மிகவும் பெரியது. அது
ஒளிமிக உடையது. அந்த மீனைப் பற்றி நன்கு அறிந்து மதுரைக் காஞ்சியில்
(375) பனைமீன் வழங்கும் வளைமேய் பரப்பின், என்பதற்கு ‘பனை மீன்
என்னும் சோதி உலாவும் சங்கு மேய்கின்ற கடலிடத்தே’ என்று
விளக்குகின்றார்.

பயிரியல்

     தமிழ்நாட்டில் உள்ள பயிர்வகைகளைப் பற்றிய அறிவு இவர்க்கு
உண்டு.

     சுவை மிகுதியாக உடைய பலாப்பழத்தில் சுளைகள் மிகுதியாக
இருப்பதில்லை. என்றும் (பெரும் 78), தேங்காய் பழுத்தால், அதன்
அடிப்பகுதி மூன்றாகப் புடைத்து இருக்கும் என்றும் (பெரும்.364) இவர்
அறிந்திருக்கின்றார்.

     நறைக்காய் என்பதற்கு ‘நறு நாற்றத்தை உடைய காய்; அது சாதிக்காய்’
என்றும் (முருகு-190), யாமரம்-ஆச்சாமரம் என்றும் (மலைபடு. 429) இவர்
கூறுவது இன்றும் நாம் அவற்றை அறிந்து கொள்ளத் துணை செய்கின்றது.

     கண்பு என்பதற்குச் சண்பங்கோரை என்று பொருள் எழுதி இன்றும்
நாம் அதனைக் கண்டுமகிழத் துணை செய்கின்றார் (பொருந-220).

அகராதிக் கலைஞர்

    இவர் சிறந்ததோர் அகராதிக் கலைஞர். பெரிய தமிழ் அகராதி ஒன்றை
உருவாக்கவல்ல புலமைத் திறனும் சொல்லாராய்ச்சியும் சொற்களஞ்சியமும்
இவரிடம் உண்டு. விலங்கு, பறவை, மரஞ்செடிகள், மக்களால் ஆக்கப்பட்ட
செயற்கைப் பொருள் ஆகிய பல்வேறு பொருள்களைப்பற்றிய சொற்களையும்,
ஒரு பொருளைப்பற்றிய பல சொற்களையும் பல பொருளைக் குறித்த ஒரு
சொல்லையும் இவர் நன்கு அறிந்துள்ளார்.

     பத்துப்பாட்டில் வரும் ‘அரி’ என்ற சொல்லுக்கு இவர் பல்வேறு
பொருள்களை இடம்நோக்கிக் கூறுகின்றார். அவற்றைக் காண்போம்.

     அஞ்சிறை வண்டின் அரிக் கணம் (முருகு-76) அரி அழகு.