பலர்புகழ் மூவரும் (முருகு-162). அயன் அரி அரன் என்னும் மூவரும் (திருமால்). அரிமயிர் முன்கை (பொருந-32) அரி-ஐம்மை (மென்மை). அரி ஏர் உண்கண் (சிறுபாண்-215) அரி-செவ்வரி (கோடு) அரி செத்து உணங்கிய (பெரும்பாண்-473) அரி-ஞாயிறு. அரி தேர் நல்கி (பெரும்பாண்-490) அரி-பொன். வன்கை வினைஞர் அரி பறை (மதுரைக்-262) அரித்து எழுகின்ற பறையோசை. அரி - அரித்தல். அரி பொன் சிலம்பு (மதுரைக்-444) அரி-சிலம்பின் உள்ளே இடும் மணி. அரி ஞிமிறு ஆர்ப்ப (மதுரைக்-684) அரி-வண்டு. அரி மா அன்ன (பட்டினப்-298) அரி-சிங்கம். நெல்லின் பல அரி அன்ன (மலைபடு 413) அரி-அரிசி வெள்ளரி வெண் சோறு (மலைபடு-465) அரி மாமிசத்துண்டு. அறைக் கரும்பின் அரி நெல்லின் (பொருந-193) அரி-அறுத்தல். கணச் சிதல் அரித்த (சிறுபாண்-133) அரித்த-தின்ற இவ்வாறு நச்சினார்க்கினியர் அரி என்ற சொல்லுக்கு அழகு, திருமால், மென்மை, கோடு, ஞாயிறு, பொன், அரித்தல், மணி, வண்டு, சிங்கம், அரிசி, மாமிசத் துண்டு, அறுத்தல், தின்னல் ஆகிய பல பொருள்களைத் தருகின்றார். இத்தகைய சொற்செல்வம் மிகுந்த நச்சினார்க்கினியரை அகராதிக் கலைஞர் என்னலாம். நோக்கு என்ற சொல்லுக்கு நச்சினாக்கினியர் பார்வை, அறிவு, அழகு, கண் முதலிய பொருள்களை இடத்திற்கு ஏற்ற வகையில் கூறுகின்றார். மான் நோக்கின் (பட்-149)-மான் போலும் பார்வை. நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞர் (மதுரைக் 17, 18). - கூரிய அறிவினையுடைய சித்திரகாரிகள். நோக்கு விளங்க (மதுரைக்-13)-அழகு விளங்க. நோக்கு விசை (மதுரைக்-486)-கண்பார்க்கும் விசை. மக்கள் வாழ்வும் பண்பாடும் நச்சினார்க்கினியரின் உரையைக் கொண்டு அவர் காலத்து மக்கள் வாழ்வையும் பண்பாட்டையும் அறிய முடிகின்றது. |