இவர் காலத்தில் குமரக் கோட்டம், பிரமக் கோட்டம் ஆகிய கோயில்கள் இருந்தன. ஆசீவகப்பள்ளியும், நிக்கந்தக் கோட்டமும் இருந்தன. (எழுத். 153), நூற்றுக்கால் மண்டபம் இருந்தது (எழுத். 472). சிவன் கோயில்களில் இருந்த தெய்வங்களை இவர்காலத்து மக்கள் நாயன்மார் என்று வழங்கினர் (மதுரைக்-445). கோயில்களிலும் செல்வர் மனைகளிலும் பொன் அகலும் நெய்யகலும் சுடர்விட்டன (எழுத். 160). கார்த்திகைத் திங்களில் கார்த்திகை நாளில் விளக்குகள் ஏற்றப்பட்டன. (புறத்-35). மக்கள் அமாவசையன்று உண்ணாநோன்பு இருந்தனர் (எழுத்.-223). பிணத்தைக் குடங்களில் இட்டுப் புதைத்தனர் (எழுத்-354). தமிழ் நூல், தமிழ் யாழ் (எழுத்.-128), தமிழ்க் கூத்து (385), இராஅக் கூத்து (227) என்ற உதாரணங்கள் அக்காலத்துக் கலைகளை நினைவூட்டுகின்றன. ஆண் பெண் ஆகிய இருபாலரும் உடுத்தும் உடையைப் புடவை என்ற சொல்லால் இவர் காலத்து மக்கள் வழங்கினர் (மதுரைக்-513). செல்வம் படைத்த மக்கள் கோவேறு கழுதைமீ்தும், சிவிகையிலும் சென்றனர் (பொருளதி-212). இவர் காலத்தில் வழுதுணங்காயும் (கத்திரிக்காய்) முந்திரிகைப்பழமும்* தமிழகத்தில் பயிராயின (மதுரை-529). புளியங்காயும் நெல்லிக்காயும் ஊறுகாயாகப் போட்டுப் பயன்படுத்தப்பட்டன (பெரும்.-57). போர்க்காலத்தில் அம்பும் பிறவகைக் கருவியும் பயன்பட்டன. ஏஎக்கொட்டில், சாலை, துளை, புழை (எழுத்.-277) என்ற உதாரணங்கள் நினைக்கத்தக்கவை. குதிரையை வீரர்கள் மத்திகையால் (சாட்டை) அடித்து ஓட்டினர் (எழுத்.-(202): போரில் அம்பு ஏறியும், வேல் குத்தியும் வடுப்பட்ட வீரர்கள் அவ்வடுக்களை “இஃது ஓர் ஏறு; இஃது ஓர் குத்து” என்று சுட்டிக் காட்டிப் பெருமையோடு பேசினர் (சொல்-119). இவர் காலத்தில் அண்ணாத்து ஏரியும், திட்டாத்துக் குளமும் பலரும் அறிந்த சிறப்புடன் விளங்கின (எழுத்-226). கொற்றங்குடி, கொற்ற மங்கலம், சாத்தங்குடி, சாத்த மங்கலம், வேட்டங்குடி, வேட்டமங்கலம் ஆகிய ஊர்கள் சிறப்புடன் இருந்தன (எழுத்-350). * திராட்சை; கொடி முந்திரி எனப்பட்டது. |