மதுரைக்காஞ்சியில் வரும், பரதர் தந்த பல்வேறு கூலம் என்ற அடிக்கு ‘செட்டிகள் கொண்டு வருவதால் மிக்க பலவாய் வேறுபட்ட பண்டங்கள்’ என்று பொருள் எழுதுகின்றார். இவர் காலத்தில் கடல் வாணிகத்தில் ஈடுபட்டிருந்த வணிகர்கள் ‘செட்டிகள்’ எனப்பட்டனர். மந்திரங்களைத் தமிழில் சொல்லிச் சபிக்கும் வழக்கம் இவர் காலத்தில் இருந்தது. ஆரியம் நன்று தமிழ்தீது எனவுரைத்த காரியத்தால் காலக்கோள் பட்டானைச்-சீரிய அந்தண் பொதியில் அகத்தியனார் ஆணையாற் செந்தமிழே தீர்க்க சுவா என்ற வெண்பாவைக்காட்டி, ‘தெற்கில் வாயில்திறவாத பட்டி மண்டபத்தோர் பொருட்டு நக்கீரர், ஒருவன் வாழவும் சாவவும் பாடி இன்னவாறு ஆக எனச் சவித்தற் பொருட்டு வந்த மந்திரம்’ என்று உரைக்கின்றார் (செய்-178). தானே தனக்கு நிகர் மறைமலையடிகள் திருவொற்றியூர் மும்மணிக் கோவையுள் (19, 71 - 74), தமிழ்வரம்பு உணர்ந்த கமழுறும் அறிவினும் உரைத்திறம் நிலையிடும் வரைப்படா விறலினும் தானே தனக்கு நிகர்என விளங்கிய நச்சினார்க்கினியனும் என்று பாராட்டுகின்றார். இவரது உரைகளைக் கற்கும் தமிழன்பர் இவரை நோக்கி, எல்லாம் திருச்செவியில் ஏறும்படி உரைக்க வல்லாய் ! உன்போல் எவர்க்கு வாய்க்குமே? (தமிழ்விடுதூது: 264) என்று வியந்த போற்றுவர். |