பக்கம் எண் :

உரையாசிரியர்கள்312

3

இலக்கிய உரையாசிரியர்கள் - I


1. பத்துப் பாட்டு உரைகள்

     பத்துப்பாட்டு எட்டுத் தொகை பதினென் கீழ்க்கணக்கு ஆகியவை
பழந்தமிழ் இலக்கியக் கருவூலங்கள். பத்துப்பாட்டு எட்டுத்தொகை
ஆகியவற்றை (பதினெண்) மேல் கணக்கு என்று கூறுவதுண்டு. கணக்கு என்ற
சொல், நூலைக் குறிக்கின்றது. மேல் கணக்கை, உரையாசிரியர்கள பாட்டும்
தொகையும் என்று குறிப்பிடுகின்றனர்; இவற்றைப் பாடியவரைச் சங்க
சான்றோர் என்று கூறுகின்றனர்; கீழ்க்கணக்கு நூல்களைப் பாடியவரைப்
பிற்சான்றோர் என்றும் கூறுகின்றனர். மேல், கீழ் என்பவை பாடலின் அடி
வரையறை கருதி இட்ட பெயர்கள்.

     மேல்கணக்கு, பலர் பாடிய பாடல்களின் தொகுப்பு (தொகை) நூல்கள்.
கீழ்க்கணக்குகளில் நாலடியார் ஒன்றினைத் தவிர மற்றவை தனித்தனிப் புலவர்
பாடிய தனி நூல்கள். பாட்டும் தொகையும் ஆசிரியப்பாக்களால் ஆனவை;
கீழ்க் கணக்கு நூல்கள் வெண்பாக்களால் ஆனவை.

     முச்சங்க வரலாற்றைக் கூறுகின்ற இறையனார் களவியல் உரை கடைச்
சங்க நூல்களாக எட்டுத் தொகை நூல்களைக் குறிப்பிடுகின்றது.
பத்துப்பாட்டைக் கூறவி்ல்லை. இது ஆராய்ச்சிக்குரிய செய்தியாகும். அந்த
உரை தோன்றிய காலத்தில் தனித்தனிப் பாடல்களாகவே வழங்கி, பின்னர்த்
தொகுக்கப்பட்டிருக்கலாம்.

     தமிழ்விடுதூது (56),

     மூத்தோர்கள்
     பாடியருள் பத்துப் பாட்டும் எட்டுத் தொகையும்
     கேடில் பதினெட்டுக் கீழ்க் கணக்கும்

என்று கூறுகின்றது.