அடுத்து வரும் பகுதிகளில் இவற்றிக்கு உள்ள உரைச் செல்வங்களைப் பற்றி விரிவாகக் காண்போம். திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம் ஆகிய பாடல்கள் பத்தும் அடங்கிய நூல்பத்துப் பாட்டு என்று பெயர் பெற்றது. இப் பாடல்களை நினைவில் கொள்ளுவதற்குப் பின்வரும் பழைய வெண்பா துணை செய்கின்றது. முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை பெருகு வளமதுரைக் காஞ்சி-மருவினிய கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப் பாலை கடாத்தொடும் பத்து. பத்துப்பாட்டு முழுவதற்கும் உரை எழுதியுள்ள நச்சினார்க்கினியர் உரைத்திறன்களை முன்னர்க் கண்டோம். அவருக்கு முன்னும் பத்துப்பாட்டிற்குச் சில பழைய உரைகள் இருந்தன. அவ்வுரைகளை நச்சினார்க்கினியர், பெயர் குறிப்பிடாமல் சுட்டுகின்றார். அந்த உரையாசிரியர் கொண்ட வேறு வேறு பாடங்களைக் காட்டுகின்றார். திருமுருகாற்றுப் படைக்கு மட்டும் நான்கு பழைய உரைகள் கிடைத்து வெளிவந்துள்ளன. பத்துப்பாட்டு முழுவதற்கும் பொ. வே. சோமசுந்தரனார் மிக அருமையான உரை எழுதியுள்ளார். இவர்க்குமுன், வை. மு. கோபால கிஷ்ணமாச்சாரியர் பத்துப் பாட்டில் பெரும்பான்மையான பாடல்களுக்கு உரைகண்டுள்ளார். ஐயம்பெருமாள் கோனார் கல்லூரி மாணவர்கட்குப் பாடமாக வைத்த பாடல்களுக்கு உரையும் விளக்கமும் எழுதியுள்ளார். ந. சி. கந்தையாபிள்ளை எல்லாப் பாடல்களுக்கும் பொழிப்புரை (வசனம்) தந்துள்ளார். பத்துப் பாட்டுச் சொற்பொழிவு நூலைக் கழகம் வெளியிட்டுள்ளது. டாக்டர் மா. இராசமாணிக்கனார், பத்துப்பாட்டில் வருகின்ற இடப் பெயர்களை விரிவாக ஆராய்ந்து இன்று அவை எங்கெங்கே உள்ளன என்று தக்க சான்றுகளுடன் காட்டியுள்ளார். முற்காலத்து அரசியல் நாகரிகம் மன்னர் வரலாறு மக்கள் வாழ்க்கை ஆகியவற்றை நன்கு விளக்கியுள்ளார். இதனைச் சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. ஏதேனும் ஒரு பாடலுக்கு விளக்கமும் திறனாய்வும் எழுதியவர்கள் பலர் உள்ளனர். கல்லூரிகளில் பாடமாக வைக்கப் பட்ட பாடல்கள் விளக்கம் பல பெற்றன. அவற்றைக் காண்போம். |